மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனசாக வழங்க மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கவும் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

78 நாள் ஊதியம்

அரசிதழ் பதிவு பெறாத, தகுதியுடைய ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. அவர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்துக்கு இணையான போனஸ் வழங்கப்படும்.

தண்டவாள பராமரிப்பாளர், லோகோ பைலட், கார்டுகள், நிலைய அதிகாரிகள், சூப்பர்வைசர்கள், டெக்னீஷியன்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன், அமைச்சு பணியாளர்கள், இதர குரூப் சி பணியாளர்கள் (ரெயில்வே பாதுகாப்பு படையினர் தவிர) ஆகியோருக்கு போனஸ் கிடைக்கும்.

ரூ.1,968 கோடி செலவு

மொத்தம் 11 லட்சத்து 7 ஆயிரத்து 346 ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். இதற்காக ரூ.1,968 கோடிேய 87 லட்சம் ஒதுக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. ரெயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்பாட்டுக்காக இந்த போனஸ் வழங்கப்படுகிறது. இது, அவர்களை மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும்.

கடந்த 2022-2023 நிதிஆண்டில் ரெயில்வேயின் செயல்பாடும் சிறப்பாக இருந்தது. மொத்தம் 1,509 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச்சென்றது. 650 கோடி பயணிகளை ஏற்றிச்சென்றது.

அகவிலைப்படி உயர்வு

இதுபோல், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியையும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தையும் தலா 4 சதவீதம் உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜூலை 1-ந் தேதியில் இருந்து கணக்கிட்டு, அவர்களுக்கு இத்தொகை வழங்கப்படும். பண்டிகை காலத்தில் அவர்களின் நலனுக்காகஇம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.12,857 கோடி செலவு

இதனால் 48 லட்சத்து 67 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 67 லட்சத்து 95 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். அவர்களது அகவிலைப்படியும், அகவிலை நிவாரணமும் அடிப்படை ஊதியம் மற்றும் அடிப்படை ஓய்வூதியத்தில் 46 சதவீதமாக உயரும்.

இந்த உயர்வால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்து 857 கோடி செலவாகும். 7-வது ஊதியக்குழு சிபாரிசு அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வுக்கேற்ப அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

கோதுமை

மேலும், 2024-2025 சந்தை பருவத்தில், கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்த பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது, கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 125 ஆக உள்ளது. இந்த உயர்வை தொடர்ந்து, ரூ.2 ஆயிரத்து 275 ஆக அதிகரிக்கும்.

மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு, இதுதான் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வில் மிகவும் அதிகம் ஆகும்.

பருப்பு, கடுகு

இதர ‘ரபி’ பருவ பயிர்களான மசூர் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.450-ம், கடலைப்பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.105-ம், பார்லிக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.115-ம், கடுகுக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.200-ம், குங்குமப்பூ விதைக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.150-ம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

லடாக் மின்திட்டம்

லடாக்கில், 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்உற்பத்தி நிலையத்தையும், 12 ஜிகாவாட் பேட்டரி எரிசக்தி சேமிப்பு வசதியையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

மின்சாரத்தை எடுத்து செல்வதற்காக, லடாக்கில் இருந்து அரியானா மாநிலம் கைதால் வரை மின்சார வழித்தடம் அமைக்க ரூ.20 ஆயிரத்து 773 கோடி ஒதுக்க பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

2029-2030 நிதிஆண்டுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments