வங்க கடலில் தாழ்வு மண்டலம் தமிழ்நாடு, புதுச்சேரியில் 28-ந் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்




தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 28-ந் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, மதுரை மாவட்டம் மேலுார் மற்றும் சென்னை அயனாவரம் தாலுக்கா அலுவலகம் ஆகிய பகுதிகளில், தலா 5 செ.மீ., மழை பெய்தது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 4 செ.மீ., மழை பதிவானது.இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாழ்வு மண்டலம்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதிநிலவியது. இது தற்போது வலுப்பெற்று, ஒடிசாவின் பரதீப்பிற்கு தெற்கே சுமார் 590 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் டிகாவில் இருந்து தெற்கே சுமார் 740 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவி வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி, வங்கதேசம், அதை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடலோர பகுதிகளை அடுத்த 3 நாட்களுக்கு நெருங்கும். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்.இதன் காரணமாக, தென்தமிழகம் ஒரு சில இடங்கள், வடதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 26-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 27, 28 ஆகிய தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓமன் நோக்கி ‘தேஜ்’

தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய 'தேஜ்' புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்கிறது. இது, நாளை மிக தீவிர புயலாக ஏமன் மற்றும் ஓமன் கடற்கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பாதிப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

அந்தவகையில் சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பலமான காற்று வீசுகிறது. ஆனால் துறைமுகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை இது குறிக்கும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments