புதுக்கோட்டை அருகே, அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த 10-ம் வகுப்பு மாணவர் மின்சாரம் பாய்ந்து பலி காப்பாற்ற சென்ற பக்கத்து வீட்டு பெண் படுகாயம்




புதுக்கோட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 10-ம் வகுப்பு மாணவர் மின்சாரம் பாய்ந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற பக்கத்து வீட்டு பெண் படுகாயமடைந்தார்.

பலத்த மழை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கோமாபுரம் அண்ணா நகர் பகுதியை ேசர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி இந்திரா காந்தி. செந்தில்குமார் இறந்து விட்டார். இவர்களது மகன் ராம்குமார் (வயது 15). இவர், தஞ்சாவூர் மாவட்டம், முத்தாண்டிபட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

விடுதியில் தங்கி படித்து வந்த அவர் விடுமுறைக்காக அவரது வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ெசந்தில்குமாரின் வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது.

மின்சாரம் பாய்ந்தது

இதையடுத்து பள்ளிக்கு செல்வதற்காக ராம்குமார் காலையில் எழுந்து வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக ராம்குமார் மிதித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதைப்பார்த்த பக்கத்து வீட்டில் வசித்து வந்த சந்திரா என்பவர், ராம்குமாரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதையடுத்து அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

மாணவா் பலி

இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராம்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். படுகாயமடைந்த சந்திராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே அங்கு வந்த கந்தர்வகோட்டை போலீசார் ராம்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments