விலகியது தென்மேற்கு பருவமழை.. பின்னாடியே வருது வடகிழக்கு பருவமழை.. அடுத்த 72 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் 


சென்னை: நாடு முழுவதிலும் இருந்து தென்மேற்கு பருவமழை விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த 72 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை:
 
இந்தியாவில் மழை பொழிவைத் தரும் காலங்கள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ காலம்தான். இதில், தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். தென்மேற்குப் பருவ மழையால் இந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதிகள் பயன் பெறுகின்றன.

தென்மேற்கு பருவமழை: 

தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவக் காலத்தில் குறைந்த அளவு மழையை மட்டுமே பெறும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்கள் மட்டுமே தென்மேற்குப் பருவ மழையால் கணிசமான மழை பெறுகிறது. இந்த வருடம் தென்மேற்குப் பருவமழை இன்று முதல் விலகிவிட்டது.

வடகிழக்கு பருவமழை: 

தமிழகத்திற்கு அதிக அளவில் மழை தரக்கூடியது வடகிழக்கு பருவமழை. இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் 25 ஆம் தேதிக்குள் தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. கடந்த ஜூன் மாத மத்தியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இந்தியாவிலிருந்து முழுவதுமாக இன்று முதல் விலகி விடை பெற்று விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை எப்போது தொடங்கும்:

 வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் 13 முதல் 27ஆம் தேதி வரையிலான நாட்களில் எப்போது பருவமழை தொடங்கினாலும் அது வழக்கமான நாளாகவே கருதப்படும். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை அடுத்த 72 மணி நேரத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அடை மழை காலம்: 

வடகிழக்குப் பருவக் காற்றால் ஏற்படக் கூடிய மழை வடகிழக்குப் பருவமழை ஆகும். பின்னிரவு முதல் காலை வரை மழை பெய்வது வடகிழக்குப் பருவ மழையின் சிறப்பம்சம். வடகிழக்குப் பருவமழை, தொடர்மழையாக மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை நீடிக்கும். அதுதான் அடைமழை காலம் என்று கிராமங்களில் சொல்வார்கள்.

புயல்கள் உருவாகும்: 

வடகிழக்குப் பருவமழை காலங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் இலங்கையின் கிழக்கு கரையோர பகுதிகளில் மழைப் பொழிவு இருக்கும். குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் போன்றவை உருவாகும் காலங்களில் விடாது மழை பெய்யும்.

மழை அளவு எவ்வளவு:

 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் போது சராசரியாக அக்டோபரில் 177.2 மில்லி மீட்டர், நவம்பரில் 178.8 மில்லி மீட்டர், டிசம்பரில் 92 மில்லி மீட்டர் என மொத்தம் தமிழகத்தில் 448 மில்லி மீட்டர் மழை இயல்பாக பெய்யக்கூடும். வடகிழக்குப் பருவமழையின் இயல்பான மழை அளவு 44.8 சென்டிமீட்டர். தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டிய அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகாலமாகவே வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாகவே பெய்துள்ளது.

சூறையாடிய புயல்கள்:

 வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னங்கள் உருவாகின்றன. இந்த காலத்தில்தான் தமிழகத்தில் நிஷா புயல், ஜல் புயல், தானே புயல், நீலம் புயல், வர்தா, ஒக்கி, கஜா என பல புயல்கள் சென்னையையும், கடலோர மாவட்டங்களையும் தாக்கியுள்ளன. மாண்டஸ் புயல் கடந்த ஆண்டு மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது.

தமிழகத்தையும் சென்னை மாநகரத்தையும் எத்தனையோ புயல்களும் மழையும் தாக்கியுள்ளன. சுனாமி என்ற ஆழிப்பேரலை சென்னையை சூறையாடியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு மிகப்பெரிய வெள்ளத்தையும் சந்தித்துள்ளது தலைநகரம் சென்னை. எத்தனை இயற்கை பேரிடர்கள் வந்தாலும் எதையும் எளிதில் சமாளித்து மீண்டு எழுந்து கம்பீரமாக நிற்பதுதான் சென்னை மாநகரத்தின் சிறப்பு. வர்லாம் வர்லாம் வா.. என இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராகவே உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments