மண்டபம் கடல் பகுதியை தோண்டி ஆழப்படுத்த மும்பையில் இருந்து சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த மிதவை கப்பல்




மண்டபம் கடல் பகுதியை தோண்டி ஆழப்படுத்த மும்பையில் இருந்து சரக்கு வாகனத்தில் மிதவை கப்பல் கொண்டுவரப்பட்டது.

ரோந்து கப்பல்

மண்டபத்தில் இந்திய கடலோர காவல் படை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கடலோர காவல் படை நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிக்காக 5 ஹோவர் கிராப்ட் கப்பல்கள், 2 பெரிய கப்பல் மற்றும் 2 அதிவேக ரோந்து கப்பல்கள் உள்ளன. இந்த கப்பல்கள் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் இந்திய கடல் எல்லை வரையிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

ரோந்து கப்பல்கள் வந்து செல்லும் வடக்கு கடல் வழி பாதையில் கடல் நீரோட்ட மாறுபாட்டால் அடிக்கடி ஆழமான பகுதிகள் மணலால் மூடப்பட்டு வருகின்றன. இதனால் ரோந்து கப்பல்கள் அந்த கடல் வழியாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

கடல் ஆழப்படுத்தும் பணி

இந்த நிலையில் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்கள் மணலில் சிக்காமல் எளிதாக சென்று வருவதற்கு வசதியாக கடல் பகுதியை தோண்டி ஆழப்படுத்தும் பணி கடந்த 1 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கூடுதலாக மிதவை கப்பல் ஒன்று மண்டபம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த கப்பல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பெரிய சரக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டுவரப்பட்டு கடந்த 2 நாட்களாக மண்டபம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சரக்கு வாகனத்தில் ஏற்றி வைத்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இந்த மிதவை கப்பல் இன்னும் ஓரிரு நாளில் மண்டபம் வடக்கு துறைமுக கடல் பகுதிக்கு கொண்டு சென்று, கடலில் இறக்கப்பட்டு கடலை தோண்டி ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments