குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலத்தையும் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார். அவர் தனது பயணத்தின்போது, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுவதோடு, புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலத்தையும் திறந்துவைக்கிறார்.
விண்வெளித்துறையில் இந்தியா தனி முத்திரை பதித்து வருகிறது. ‘சந்திரயான் 2’ வெற்றிக்கு பின்னர் சூரியனை ஆய்வு செய்யும் ‘ஆதித்யா எல்1’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

அடுத்தக்கட்டமாக விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு

விண்கலங்களை ஏவுவதற்காக ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2 ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. இங்கிருந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கை கோள்களை ராக்கெட்டுகளில் பொருத்தி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவிவருகிறது.

இந்த நிலையில் விண்வெளி செயல்பாடுகளில் தனியார் துறை பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் விண்வெளித்துறையில் நீண்டகாலப் பயன் அளிக்கும் சீர்திருத்தங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 24-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

இந்தியாவை சுய சார்பு கொண்ட நாடாகவும், தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடாகவும் உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குலசேகரன்பட்டினம் தேர்வு

வழக்கமாக தயாரிக்கப்படும் பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளுடன், சிறிய வகை மற்றும் நானோ வகை செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தினர்.

வெளிநாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைந்த செலவில் செயற்கைகோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்படுகின்றன. அதனால் பல நாடுகளும் இஸ்ரோ மூலமாக தங்களுடைய செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த ஆர்வம் காட்டுகின்றன.

இதற்காக மேலும் ஒரு ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தது. இதில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி வருகை

ஸ்ரீஹரிகோட்டா 13.43 டிகிரியில் உள்ளது. ஆனால், குலசேகரன்பட்டினம் 8 டிகிரியில் புவி வட்டப்பாதைக்கு மிக அருகில் இருப்பதுடன், தட்பவெப்ப சூழல் ராக்கெட் ஏவுதளம் இயங்குவதற்கு சாதகமாக பல அம்சங்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. இதற்காக குலசேகரன்பட்டினம் அருகில் உள்ள கூடல் நகர், அமராபுரம், மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் 2,230 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போது இந்த இடங்களை சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு ரூ.6 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. தற்போது குலசேகரன்பட்டினத்தில் ரூ.900 கோடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசும் ஒப்புதல் அளித்துவிட்டது. இதற்கு தேவைப்படும் நிலத்தையும் மாநில அரசு வழங்கி உள்ளது. ஏவுதளம் அமைக்கும் பணி துரித கதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

முன்னதாக கட்டுமான பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிற டிசம்பர் மாதம் குலசேகரன்பட்டினம் வருகிறார்.

பாம்பன் பாலம்

இஸ்ரோ தலைவர் சோம்நாத் கடந்த வாரம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதேபோல் ராமேசுவரம்-பாம்பன் இடையே கடலுக்குள் அமைக்கப்பட்ட புதிய பாலத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அதேபோல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் புதிய சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. அதையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments