புதுக்கோட்டையில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு

புதுக்கோட்டையில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

குழுவினர் அதிருப்தி

புதுக்கோட்டையில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அப்துல்சமது, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, கருமாணிக்கம், கிரி, கோவிந்தசாமி, சதன் திருமலைக்குமார், சின்னதுரை, பூண்டி கலைவாணன், டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். முதலில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையை பார்வையிட வந்தனர். அப்போது குழுவினருக்கு முறையான தகவல், வரவேற்பு இல்லாததால் அதிருப்தி அடைந்தனர். இதனால் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் குழுவினர் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடமும் குழுவின் உறுப்பினர்கள் முறையிட்டனர். பணிமனையில் நாம் எதை பார்ப்பது, அடுத்த இடத்திற்கு செல்வோம் என கூறிவிட்டு அங்கிருந்து குழுவினர் உடனடியாக புறப்பட்டனர். இதனால் அந்த இடத்தில் சற்று பரபரப்பானது.

ஆவின் நிறுவனம்

இதைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகளுக்கான விடுதியை பார்வையிட்டனர். அங்கு அடிப்படை வசதிகள் மற்றும் உணவு வசதி குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தனர். அதன்பின் ஆவின் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கழிவு நீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதை பார்வையிட்டனர். பின்னர் சிப்காட் பகுதியில் 3,786 மரக்கன்றுகள் நடப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் பசுமை பூங்காவினை பார்வையிட்டனர்.

அதனைதொடர்ந்து அன்னவாசல் பகுதியில் மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையத்தினை பார்வையிட்டு, மின் வினியோகம் குறித்தும், பயன்பெறும் கிராமங்களின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தனர்.

நலத்திட்ட உதவிகள்

இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் குழுவின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குழுவின் தலைவர் சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 19 பயனாளிகளுக்கு ரூ.1.78 லட்சம் மதிப்பிலான திருமண உதவி தொகைகளையும், 41 பயனாளிகளுக்கு ரூ.9.20 லட்சம் மதிப்பிலான இயற்கை மரண நிவாரண உதவித் தொகைகளையும், தாட்கோ மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.19.36 லட்சம் மதிப்பிலான மானிய உதவித்தொகை மூலம் வாகனங்களையும், 7 தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.56.63 லட்சம் மதிப்பீட்டில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கான ஆணைகளையும் குழுவினர் வழங்கினர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்ளிட்ட அரசு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments