பறக்க ரெடியா? வாரம் 3 நாள்.. திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவை தொடக்கம்




திருச்சி விமான நிலையத்தில் இருந்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவை தொடங்கி உள்ளது. வியட்நாமில் இருந்து 50 பயணிகள் முதற்கட்டமாக வந்த நிலையில் திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு 100 பேர் புறப்பட்டு சென்றனர்.


தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் பன்னாட்டு விமான நிலையங்கள் அமைந்துள்ளது. மாறாக தூத்துக்குடி, சேலம், வேலூர் உள்ளிட்ட இடங்களில் உள்நாட்டு விமான நிலையங்கள் அமைந்துள்ளது.


திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, சார்ஜா, பஹ்ரைன், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து வியட்நாமுக்கு விமான சேவை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவையை வியட் ஜெட் நிறுவனம் தொடங்க முடிவு செய்தது. அதன்படி தற்போது திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக வியட்நாமுக்கு விமான சேவை தொடங்கி உள்ளது.

முதற்கட்டமாக நேற்று நள்ளிரவு 11.27 மணிக்கு வியட்நாமில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு முதல் விமானம் வந்தது. இதில் 50 பயணிகள் வந்திறங்கினர். பிறகு திருச்சி விமான நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12.40 மணிக்கு அந்த விமானம் வியட்நாமுக்கு புறப்பட்டு சென்றது. 100 பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்த திருச்சி-வியட்நாம் விமான சேவையானது வாரத்தில் 3 நாட்கள் இயங்க உள்ளது. அதன்படி திருச்சியில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில், வியட்நாமில் இருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் விமானங்கள் இயங்க உள்ளன. முன்னதாக விமான சேவை துவக்க நிகழ்ச்சி திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது.


இதில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், துணை பொது மேலாளர் ஜலால் மற்றும் விமான நிறுவன பொறுப்பாளர் ஹேமசேகர், அதிகாரி இளவரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை விமான நிறுவனத்தின் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments