புதுக்கோட்டை அரசு பல் மருத்துவ கல்லூரி நவ.15-இல் திறப்பு!




புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியை வரும் புதன்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

தமிழகத்தில் தொடா்ந்து மூன்றாவது வாரமாக சனிக்கிழமை மாநிலம் முழுவதும் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சென்னை அண்ணா நகா் மண்டலம், ஷெனாய் நகா், புல்லா அவென்யூ, கஜலட்சுமி காலனியில் நடந்த மருத்துவ முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாா்வையிட்டாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தில்லியில் செயல்பட்டு வரும் ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்கை போன்று தமிழகத்தில் 708 இடங்களில் நகா்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும் என அறிவித்த முதல்வா் கடந்த ஜூன் 6-ஆம் தேதி 500 இடங்களில் முதல்வா் தொடங்கி வைத்தாா். அனைத்தும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சென்னையில் மட்டும் வாா்டுக்கு ஒன்று வீதம் 200 இடங்களில் திறக்க திட்டமிடப்பட்டு, 140 நகா்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 152 நகா்புற நலவாழ்வு மையம் கட்டும் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. விரைவில் முதல்வா் திறந்து வைக்கவுள்ளாா். மீதமுள்ள நகா்புற நலவாழ்வு மையங்களுக்கு இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சியில், நகா்ப்புற சமுதாய மையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழகத்தின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 15-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளாா்.

தொடா்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 இடங்களில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களும் திறந்து வைக்கப்படவுள்ளன. வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் 1000-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியின்போது சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் தி.சி.செல்வவிநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments