வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்




வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

டி.ஜி.பி. அலுவலகத்தில் அதிக மழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்து இருக்கிறது. அந்த வகையில் 36 இடங்களில் கன மழை பதிவாகி இருப்பதாகவும், அதிகபட்சமாக சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் 12 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாகவும் ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக இந்த அளவுக்கு மழை கிடைத்து இருக்கிறது.

மேலும் 4 நாட்களுக்கு...

இதன் தொடர்ச்சியாக தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (வியாழக்கிழமை) ஆந்திர கடலோர பகுதியையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. அதன் பின்னர், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நாளை (வெள்ளிக்கிழமை) செல்லக்கூடும்.

இதன் தாக்கத்தால், இன்று முதல் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை மேலும் 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் கனமழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவே வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். சென்னையை பொறுத்த வரையில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்யக்கூடும்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

இதற்கிடையில், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் அடுத்தக்கட்ட நகர்வை பொறுத்து, தமிழ்நாட்டில் மேலும் மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறினர்.

வடமேற்கு, மத்திய மேற்கு, வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments