கோட்டைப்பட்டினத்தில் மகளிர் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை




கோட்டைப்பட்டினத்தில் உள்ள மகளிர் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பள்ளிகள்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ஊராட்சி மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் 15 வார்டுகள் மற்றும் 3 கவுன்சிலர் வார்டுகள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், மகளிர் உயர்நிலைப்பள்ளியும் உள்ளன.

இந்த பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கடந்த 8 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தரம் உயர்த்த கோரிக்கை

இந்தநிலையில் இப்பகுதியை சேர்ந்த மாணவிகள் மேல்படிப்புக்காக அருகே உள்ள மணமேல்குடி அல்லது அம்மா பட்டினம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவிகளின் பெற்றோர் தங்களது மகள்களை தொலைதூரம் சென்று படிக்க தயங்கிக்கொண்டு படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள மாணவிகளின் கல்வி மிகவும் பாதிப்படைந்து வருகிறது.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

கோட்டைப்பட்டினம் மகளிர் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த ஊர் சார்பாக பணமும் செலுத்தப்பட்டு விட்டது. ஆனால் இதுவரை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்படவில்லை. அதுபோக இந்த மகளிர் உயர்நிலைப்பள்ளி செயல்படும் கட்டிடம் ஜமாத் மூலமாக கட்டப்பட்ட பழைய கட்டிடம் ஆகும்.

பழுதடைந்த கட்டிடம்

இந்த பழைய கட்டிடத்தில் தான் இந்த பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் கட்டி சுமார் 80 ஆண்டுகள் ஆயிற்று. இதனால் கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளன. இதனால் மாணவிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே அரசு பள்ளிக்கு போதுமான கட்டிட வசதியும், மகளிர் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments