மாவட்டத்தில் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25 ஆயிரத்து 735 பேர் விண்ணப்பம் 9-ந் தேதி கடைசி நாள்




புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25 ஆயிரத்து 735 பேர் விண்ணப்பித்துள்ளனர். 9-ந் தேதி கடைசி நாளாகும்.

வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி வெளியிடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 லட்சத்து 51 ஆயிரத்து 559 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 64 ஆயிரத்து 175 பெண் வாக்காளர்கள் மற்றும் 64 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 798 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்ப படிவங்கள் ஆன்லைன் மூலமாகவும், அலுவலகங்களில் நேரடியாகவும் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதுதவிர கடந்த நவம்பர் மாதத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

மொத்தம் 39 ஆயிரம் விண்ணப்பம்

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் தொடர்பாக வருகிற 9-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை அதாவது கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி முதல் நேற்று வரை ஆன்லைன் மூலம் மற்றும் நேரடியாக என மொத்தம் 39 ஆயிரத்து 310 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் புதிதாக பெயர் சேர்க்க 25 ஆயிரத்து 735 பேரும், பெயர் நீக்க 3 ஆயிரத்து 887 பேரும், பெயர் திருத்தம் மேற்கொள்ள 9 ஆயிரத்து 688 பேரும் விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து விண்ணப்ப மனுக்கள் பெறப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி வெளியிடப்படுகிறது. வருகிற 9-ந் தேதிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தாலும் மனுக்கள் பெறப்படும் எனவும், தேர்தல் நேர பட்டியலில் அவர்களது பெயர் இடம்பெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments