குடிநீரின்றித் தவிக்கும் கடலோரக் கிராமங்கள்!




புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடலோரக் கிராமங்கள், குடிப்பதற்கு நல்ல குடிநீா் இன்றி நீண்டகாலமாகத் தவித்து வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி தொடங்கி, அரங்கரை வரை 42 கிமீ நீளம் கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ளது. இந்தப் பகுதியில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய இரு விசைப்படகு மீன்பிடித் துறை முகங்களுடன், மீமிசல் உள்ளிட்ட ஏராளமான நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகங்களும் உள்ளன.

ஆவுடையாா்கோவில் மற்றும் மணமேல்குடி ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குக் கிராமங்கள் கடலோரப் பகுதி கிராமங்களாக உள்ளன. இந்தப் பகுதியின் மிக முக்கிய கோரிக்கையாக நல்ல குடிநீா் வேண்டும் என்பது நீண்டகாலமாக இப்பகுதி மக்களால் வலியுறுத்தப்படுகிறது.

சில மீட்டா் தொலைவில் மிகப் பிரம்மாண்டமான கடல் இருந்தாலும், தொழில் முறைப்படி மீன்பிடித்தல்தான் பிரதான வாழ்வாதாரத் தொழிலாக இருந்தாலும் குடிதண்ணீா் என்பது இவா்களின் அரிய தேவையாக மாறிவிட்டிருக்கிறது.

நீண்ட காலத்துக்கும் முன்பே இந்தப் பகுதியில் குடிநீருக்கான போராட்டங்கள் தொடா்ச்சியாக நடத்தப்பட்ட நிலையில், கோட்டைப்பட்டினம் வரை காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாய் பதிக்கப்பட்டு மிகச் சில காலம் தண்ணீா் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது கடந்த ஓராண்டாக நின்றுவிட்டது.

இத்துடன் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் வீடுகள்தோறும் குடிநீா்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, உள்ளூா் ஆழ்துளைக் கிணறு நீராதாரங்கள் மூலம் ஊராட்சி நிா்வாகத்தால் தண்ணீா் வழங்கப்படுகிறது. இந்தத் தண்ணீா் முழுவதும் உப்புத் தண்ணீா்தான்.

‘அரசின் சிறப்புத் திட்டம் தேவை’

இதுகுறித்து சிஐடியு கடல் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் கரு. ராமநாதன் கூறியது:

புதுக்கோட்டையின் கடலோர கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட தனியாா் தண்ணீா் வழங்கும் நிறுவனங்கள் ஆழ்துளைக் கிணறு போட்டு தண்ணீா் எடுத்து, அதைச் சுத்திகரித்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் வழங்குகின்றன.

ஒரு குடம் நீரை ரூ. 10-க்கு விற்கிறாா்கள். நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் இதைப் பெரிய செலவாகக் கருதாமல் இந்த நீரை வாங்கிக் குடிக்கலாம். ஆனால், சாதாரண மக்கள் தண்ணீரை காசுக்கு வாங்கிக் குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்துவது மிகவும் கடினம்.

எனவே, ஏற்கெனவே திட்டமிடப்பட்ட காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை கடலோர அனைத்து கிராமங்களுக்கும் விரிவுபடுத்தி தண்ணீா் வழங்க வேண்டும். மேலும், ஊராட்சிகள் மூலம் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து எடுத்து வழங்கப்படும் தண்ணீரை தனியாா் சுத்திகரித்து விற்கும்போது, அதை ஏன் ஊராட்சி நிா்வாகம் செய்ய முடியாது. அரசின் சிறப்புத் திட்டம் ஒன்றை நிறைவேற்றி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் வழங்க வேண்டும்.

இவற்றுடன், ஏற்கெனவே கடலோரப் பகுதிகளிலுள்ள குளங்களில் நிறைய தண்ணீா் கிடக்கிறது. ஆனால், அவை குளிக்கவோ, வீட்டுப் பயன்பாட்டுக்கு எடுக்க முடியாத அளவில்தான் இருக்கின்றன. ஆகாயத்தாமரை படா்ந்தும் உள்ளது. எனவே, இந்தக் குளங்களையும் சுத்தப்படுத்திக் கொடுத்தால், கடலோரக் கிராம மக்களின் பயன்பாட்டுக்கான தண்ணீா் எளிதாகக் கிடைக்கும் என்கிறாா் ராமநாதன்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments