சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்: பிரசவத்தில் இறந்த பச்சிளம் குழந்தையின் உடல் அட்டை பெட்டியில் வைத்து ஒப்படைப்பு அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பணியிடை நீக்கம்




சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்து போன பச்சிளம் குழந்தையின் உடல் அட்டை பெட்டியில் வைத்து ஒப்படைத்த சம்பவத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

8 மாத கர்ப்பிணி

சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் மசூத் (வயது25). கூலி வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சோபியா (20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. சோபியா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்தநிலையில், கடந்த 6-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு சோபியாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது, மசூத் தனது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தொடர்பு கொண்டார். ஆனால், மிக்ஜம் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட கனமழையில் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகள் மழைநீரால் மூழ்கியது. இதனால், எந்த வாகனமும் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், செல்போனில் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையும் இருந்துள்ளது.

வீட்டிலேயே பிரசவம்

இந்தநிலையில் பிரசவ வலியால் துடித்த சோபியாவிற்கு வீட்டிலேயே குழந்தை பிறந்தது. பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், மீன்பாடி வண்டி மூலம் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தாய் மற்றும் குழந்தையை அழைத்து சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க மின்சாரம் இல்லாத நிலையில் அங்குள்ள ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சோபியா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சோபியாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே வேளையில் குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது. அதன்பின், குழந்தையின் உடல் ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அட்டை பெட்டியில் உடல்

இந்த சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், குழந்தை பிறக்கும் போதே இறந்து போனது தெரிய வந்தது. எனவே, குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதனால், ஆஸ்பத்திரி நிர்வாகம் பிரேத பரிசோதனை செய்யாமல் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை குழந்தையின் உடலை வாங்குவதற்காக மசூத் பிணவறைக்கு சென்றார். அங்கு இறந்த குழந்தையை ஒரு அட்டை பெட்டியில் வைத்து, குழந்தையை சரியான முறையில் துணியால் சுற்றாமல் பிணவறை உதவியாளர்கள் மசூத்திடம் ஒப்படைத்தனர்.

கடும் கண்டனம்

குழந்தையின் உடல் வைக்கப்பட்ட அட்டை பெட்டியை தூக்கி கொண்டு மசூத் அடக்கம் செய்ய மசூதிக்கு சென்றார். குழந்தையின் உடல் அட்டை பெட்டியில் வைத்து கொண்டுவரப்பட்டதை பார்த்து மசூதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே அங்கிருந்த ஒருவர் குழந்தையின் உடல் அட்டை பெட்டியில் கொண்டு வருவதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அதை பார்த்தவர்கள், ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் மீது கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த புகைப்படம் காண்போரை கண்கலங்க செய்துள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையம்

இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் என்.எஸ்.சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், ‘மனித உரிமை சட்டப்படி இறந்து போன குழந்தையின் உரிமை மற்றும் அவரது பெற்றோரின் உரிமை பாதுகாக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்' என கூறி உள்ளார். இந்த மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

பணியிடை நீக்கம்

இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டீன் முத்துசெல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:- குழந்தையை ஒப்படைக்கும்போது, விதிகளுக்கு முரணாக அட்டைபெட்டியில் வைத்து அனுப்பியது தெரிய வந்தது. அதன்பின், இந்த சம்பவம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. அவரின் அறிவுரையின் படி, பிணவறை உதவியாளர் பன்னீர்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், 3 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோல சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments