தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் உருவான புதிய மணல் திட்டு 500 மீட்டர் நடந்து சென்று அலைகளை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்




தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் புதிதாக மணல் திட்டு உருவாகி இருக்கிறது. சாலையில் இருந்து இறங்கி சுமார் 500 மீட்டர் அந்த மணல் திட்டில் நடந்து சென்று சுற்றுலா பயணிகள் அலைகளை ரசிக்கின்றனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை

ராமேசுவரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தனுஷ்கோடி தென் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று.

தனுஷ்கோடி அரிச்சல் முனை என்பது நாட்டின் ஓர் நிலப்பரப்பு எல்லையாக இருபுறமும் கடல் சூழ அமைந்திருக்கும் ரம்மியமான இடமாகும்.

நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ராமேசுவரம் வருகிறவர்கள், அப்படியே தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை வாகனங்களில் சென்று கடல் அழகை பார்த்து ரசிக்கின்றனர். ஆனால், தனுஷ்கோடி கடலின் தன்மை என்பது எப்போதும் சீற்றம் கொண்டதாகும்.

மணல் திட்டு உருவானது

அரிச்சல்முனை சாலை வளைவில் வடக்கு அல்லது தெற்கு பகுதியில் கடலின் நீரோட்ட வேகத்தில் சீசனை பொறுத்து தற்காலிக மணல் திட்டு கடலை கிழித்துக் கொண்டு உருவாகும். சில மாதங்கள் இந்த மணல் திட்டு இருக்கும். பின்னர் நீரோட்டத்தின் திசை மாறுபடும்போது ஏற்கனவே இருந்த மணல் திட்டு மாயமாகி, அது கடலாக மாறிவிடும். வேறொரு இடத்தில் இன்ெனாரு மணல் திட்டு உருவாகும்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை தென்கடல் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மணல் திட்டு உருவாகி இருந்தது.

பருவமழை ெதாடங்கியபின்பு அந்த மணல் திட்டு மறைந்து, வடக்கு கடல் பகுதியில் புதிய மணல் திட்டு தற்போது உருவாகி இருக்கிறது.

இன்னும் சொல்வதென்றால் தென்கடல் பகுதியில்தான் வெவ்வேறு இடங்களில் கடந்த சில ஆண்டுகளாக மணல் திட்டு உருவாகி வந்தது. ஆனால், வடக்கு கடல் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான், கடல் நீரோட்ட வேகத்தின் மாறுபாட்டால் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு மணல் பரப்பு உருவாகி, மணல் திட்டாக காட்சி அளிக்கிறது.

செல்பி எடுத்து மகிழ்ச்சி

இதை சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து ரசிக்கின்றனர். மேலும் சாலையைவிட்டு இறங்கி அந்த மணல் திட்டு பரப்பில் நடந்து சென்று இருபுறமும் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளை ரசிப்பதுடன், செல்போனில் செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர். கடல் நீரோட்டத்தில் அடுத்த மாற்றம் ஏற்படும் வரை தற்காலிகமாக இந்த மணல் திட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments