தஞ்சை-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் மத்திய மந்திரியிடம், சு.கல்யாணசுந்தரம் எம்.பி. வலியுறுத்தல்




தஞ்சை-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் சு.கல்யாணசுந்தரம் எம்.பி. வலியுறுத்தினார்.

மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு

மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரியை புதுடெல்லியில், சு.கல்யாணசுந்தரம் எம்.பி. சந்தித்து கீழ்க்கண்ட கோரிக்கை மனுக்களை வழங்கினார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

4 இடங்களில் உயர்மட்ட பாலம்

தஞ்சாவூர் முதல் விக்கிரவாண்டி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் பணியினை விரைவில் முடித்துத்தர வேண்டும் திருவிடைமருதூர் தாலுகா அணைக்கரை அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அணைக்கரை ஊராட்சிக்கு அணுகு சாலை அமைத்து தர வேண்டும்.

ஜெயங்கொண்டம் முதல் கும்பகோணம் வரை தற்போது இருக்கும் சாலையை விரிவுபடுத்த வேண்டும். கும்பகோணத்தில் 2028-ல் நடைபெற உள்ள தென்னக கும்பமேளாவான மகாமக திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் சுற்றுப்புற சாலையையும், மாநகரத்தில் இருந்து சுற்றுச்சாலைக்கு செல்லும் பல இடங்களில் அணுகு சாலை அமைக்கவும், சுற்றுச்்சாலையை இணைக்க அரசலாற்றில் 4 இடங்களில் உயர்மட்ட பாலமும் அமைத்து தர வேண்டும்.

சுற்றுச்சாலை

அறுபடை வீடுகளில் நான்காம் படைவீ்டான சுவாமிமலை மற்றும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறும் திருவையாறு போன்ற பேரூராட்சிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பேரூராட்சிகளின் வெளிப்புறமாக தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் சுற்றுச்சாலை அமைத்து தர வேண்டும். தாராசுரம் பைபாசில் இருந்து திருவையாறு வரை காவிரி ஆற்றின் வலது மற்றும் இடது பக்க கரைகளின் இருவழி சாலை 100 அடி அகலத்தில் சாலை ஏற்படுத்த வேண்டும். கும்பகோணம் முதல் தஞ்சாவூர் வரை புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையின் அருகே இருபுறமும் அமைந்துள்ள ஊராட்சிகளுக்கு அணுகு சாலை ஏற்படுத்தி தரவேண்டும்.

கும்பகோணம் சுற்றுச்சாலை தற்சமயம் தாராசுரம் முதல் சாக்கோட்டை வரை விரிவுபடுத்த உள்ளது. இதனை கோவில் நகரமான நாச்சியார்கோவில் வரை விரிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments