லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: அப்பளம் போல் நசுங்கிய வாகனத்தின் முன்பகுதிகள்! - 2 டிரைவர்கள் பலி


கள்ளக்குறிச்சி மாவட்டம்  உளுந்தூர்பேட்டை அருகே நடந்த பேருந்து விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் இருந்து ரயில்கள், அரசு பேருந்துகள் தவிர்த்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில், அசுர வேகத்தில் இயக்கப்பட்டு வருவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் பல நேரங்களில் விபத்துகளும்,உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் நிலையும் பயணிகளுக்கு ஏற்படுகிறது. 

இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே நடந்த ஆம்னி பேருந்து விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து அறந்தாங்கி நோக்கி தனியார்  ஆம்னி பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சென்னை-திருச்சி நான்கு வழி சாலையில் சிறப்பு காவல் படை மைதானம் அமைந்துள்ளது.

இந்த பகுதியில் அந்த பேருந்து வந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோது மறுபக்கம் சென்றது. அப்போது எதிர்திசையில் சென்னையை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன்மீது நேருக்கு நேர் மோதிய ஆம்னி பேருந்தும், லாரியும் முன்பகுதியும் அப்பளம் போல நொறுங்கியது. ஆம்னி பேருந்தில் இருந்தவர்கள் மரண பயத்தில் கூச்சலிட்டனர். 
இந்த விபத்து தொடர்பாக காவல்துறைக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பேருந்து - லாரி விபத்தில் இரு வாகனங்களில் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்னி பேருந்து - லாரி விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments