திருச்சியில் புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்: தமிழகத்துக்கு ரூ.20,140 கோடியில் புதிய திட்டங்கள்
திருச்சியில் ரூ.1,112 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பல்வேறு துறைகளில் ரூ.20,140 கோடி மதிப்பிலான திட்டங்களில் நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். திருச்சி என்ஐடியில் ரூ.41 கோடியில் கட்டப்பட்ட மாணவர் விடுதி, பல்வேறு ரயில் பாதைகள் மின்மயமாக்கம், இரட்டை ரயில் பாதை, 5 சாலை திட்டங்கள், ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான பெட்ரோலியம், இயற்கை எரிவாயு திட்டம் உட்படபல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த வகையில், விமானத் துறை, ரயில்வே, நெடுஞ்சாலை, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கப்பல் துறை, உயர்கல்வி என பல்வேறு துறைகளில் ரூ.20,140 கோடி மதிப்பிலான திட்டங்களில், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருச்சி விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த 2024 புத்தாண்டின் எனதுமுதல் பொது நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். தற்போது, கொண்டு வரப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி அடைவதுடன், ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

கடந்த ஆண்டு இறுதியில் கனமழை, வெள்ளத்தால் அதிக வலிகளை அனுபவித்துவிட்டோம். உயிரிழப்புகளாலும், சொத்துகளை இழந்தும் பரிதவித்த குடும்பங்கள் ஏராளம். இதுபோன்ற நிகழ்வுகள் எனக்குள் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. இந்த நெருக்கடியான நிலையில், தமிழக மக்களுக்கு மத்திய அரசு துணையாக உள்ளது. அனைத்து ஆதரவையும் மாநில அரசுக்கு மத்திய அரசு அளித்து வருகிறது.

தமிழகத்தில் பிறந்த சர்.சி.வி.ராமன் போன்ற அறிஞர்களின் பங்குநாட்டின் வளர்ச்சியில் அளப்பரியதாக இருந்தது. திருவள்ளுவர், பாரதியார் போன்ற ஞானிகள் அற்புத இலக்கியங்களை படைத்துள்ளனர். நான் தமிழகம் வரும்போதெல்லாம் எனக்கு புதிய சக்தி, உத்வேகம் கிடைக்கிறது. உலகில் எங்கு பேசினாலும், தமிழ்நாடு, தமிழ் மொழியின் பெருமையை பேசாமல் என்னால் இருக்க முடியவில்லை.

உலகின் 5-வது பொருளாதார சக்தியாக இந்தியா திகழ்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நவீன கட்டமைப்புகளில் மிகப்பெரிய முதலீடு கிடைக்கும். இந்தியாவின் நவீன கட்டமைப்பில் முதலீடு அதிகரித்துள்ளதன் நேரடி பயன் தமிழகத்துக்கு கிடைத்து வருகிறது. இதன்மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தின் தூதராக தமிழகம் மாறி வருகிறது. மாநில வளர்ச்சி மூலம் தேச வளர்ச்சி என்பதே நமது அடிப்படை.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தால் 3 மடங்கு வளர்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டினர் வருகை உயரும்.

தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் தமிழகத்தில் ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்படுவதால் தொழில் வளர்ச்சி ஏற்படும். ரங்கம், சிதம்பரம், மதுரை,ராமேசுவரம், வேலூர் ஆகிய நகரங்கள் ரயில் பாதை மூலம் இணைக்கப்படுகின்றன. தமிழகத்தில் சாலை கட்டமைப்பு வசதிகளால் வணிகம், சுற்றுலா வளர்ச்சி பெருகும். துறைமுக கட்டமைப்புகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. சாகர் மாலா திட்டத்தால் துறைமுகங்களை சிறந்த சாலைகள் மூலம் இணைத்துள்ளோம்.

2014-க்கு முன்பு கொடுத்த நிதியைவிட இரண்டரை மடங்கு, சாலைகளுக்கு 3 மடங்கு, ரயில்வே துறைக்கு இரண்டரை மடங்கு என அதிக நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு செலவு செய்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு ரூ.120 லட்சம் கோடி நிதியை மத்திய அரசுஅளித்துள்ளது. தமிழக இளைஞர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர்களிடம் இருக்கும் உற்சாகம்தான் வளர்ச்சிஅடைந்த இந்தியாவுக்கு நம்பிக்கையாக மாறும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

முன்னதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, டிஆர்பி ராஜா, மெய்யநாதன், ரகுபதி, அன்பில் மகேஸ், எம்.பி.க்கள் சு.திருநாவுக்கரசர், டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, எம்எல்ஏக்கள் ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், இனிகோ இருதயராஜ், மேயர் மு.அன்பழகன், ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகர காவல்ஆணையர் என்.காமினி உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, திருச்சி வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.

‘கேப்டன்’ விஜயகாந்துக்கு புகழஞ்சலி: திருச்சியில் நடைபெற்ற விழாவில், மறைந்த விஜயகாந்துக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். அவர் பேசியபோது, ‘‘சில நாட்களுக்கு முன்பு, விஜயகாந்தை இழந்திருக்கிறோம். சினிமாவில் மட்டுமன்றி, அரசியலிலும் அவர் கேப்டனாக இருந்திருக்கிறார். சினிமா நடிப்பின் மூலமாகவும், தனது தனிப்பட்ட செயல்பாடுகள் மூலமாகவும் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் விஜயகாந்த். சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தார். அவருக்கு எனது அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். இதேபோல, வேளாண் விஞ்ஞானியும், உணவு பாதுகாப்பு திட்டத்தை தன்னகத்தே கொண்டிருந்தவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவும் மிகவும் வேதனையை ஏற்படுத்தியது’’ என்று குறிப்பிட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments