6 மாத குழந்தைக்கு கொசு கடிப்பதாக குவைத்தில் இருந்து கடிதம் எழுதிய தந்தை தஞ்சை மாநகராட்சிக்கு இ-மெயில் மூலம் அனுப்பி வைத்தார்




தனது 6 மாத குழந்தைக்கு கொசு கடிப்பதாக குவைத்தில் இருந்து தந்தை, தஞ்சை மாநகராட்சிக்கு இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பி வைத்து உள்ளார்.

குவைத்தில் இருந்து இ-மெயில் மூலம் கடிதம்

தஞ்சை மாநகராட்சி பகுதியில் தற்போது கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மாலை 5 மணி முதல் கொசுத்தொல்லையால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். கொசுவை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொசுமருந்து அடிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதி முழுவதும் சுகாதார பணியாளர்களை கொண்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சிக்கு இ-மெயில் மூலம் குவைத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை காதர் உசேன் என்பவர் எழுதி இருந்தார். அவர், தான் தஞ்சை மாநகராட்சி 30-வது வார்டில் உள்ள சின்னஅரிசிக்கார தெருவை சேர்ந்தவர் என்றும் தற்போது குவைத்தில் வேலை செய்து வருவதாக கூறி உள்ளார். சின்ன அரிசிக்கார தெருவில் வசிக்கும் தனது 6 மாத கைக்குழந்தைக்கு கொசு கடிப்பதாகவும், கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறி இருந்தார்.

அதிகாரிகள் நடவடிக்கை

இதையடுத்து மாநகர்நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, சுகாதார ஆய்வாளர்களை அழைத்து கடிதத்தில் தெரிவித்த பகுதிக்கு சென்று கொசுமருந்து அடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து சுகாதார ஊழியர்கள் சின்ன அரிசிக்காரத்தெருவுக்கு சென்று அந்த பகுதி முழுவதும் கொசுமருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் கொசுமருந்து அடித்த புகைப்படத்தை காதர்உசேனுக்கு பதிவிட்டனர்.

இதையடுத்து தனது கோரிக்கையை ஏற்று, உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்து காதர் உசேன் இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பினார். மேலும் தனது முகநூல் பக்கத்திலும் இது தொடர்பாக பதிவிட்டு நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments