திருச்சி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது உடந்தையாக இருந்த புரோக்கரும் சிக்கினார்




திருச்சி அருகே மருங்காபுரியில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியையும், உடந்தையாக இருந்த புரோக்கரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கூலித்தொழிலாளி

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி தாலுகா வேம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன் (வயது 48). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 1997-ம் ஆண்டு வேம்பனூர் கிராமத்தில் 1 ஏக்கர் 20 சென்ட் புஞ்சை நிலத்தை ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கி அதில் வீடு கட்டி வசித்து வருகிறார்.

அந்த இடத்தின் பட்டாவை பெயர் மாற்றம் செய்யக்கோரி கடந்த 26-9-2023 அன்று ஆன்லைன் மூலம் கருப்பன் விண்ணப்பித்தார். 3 மாதங்கள் கடந்தும் எந்த பதிலும் வராததால் கடந்த மாதம் 20-ந்தேதி இணையதளத்தில் தனது விண்ணப்பத்தை சரிபார்த்தபோது, அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது.

பட்டா பெயர் மாற்றம்

இதனால் கருப்பன் மீண்டும் கடந்த 19-ந்தேதி ஆன்லைனில் விண்ணப்பித்தார். பின்னர் நேற்று முன்தினம் தனது மனுவின் நிலை குறித்து இணையதளத்தில் அவர் பார்த்தபோது, அது வேம்பனூர் கிராம நிர்வாக அதிகாரியின் பரிசீலனையில் இருப்பது தெரியவந்தது.

உடனே அவர், வேம்பனூர் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் சென்று, அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி சோலைராஜை சந்தித்து, பட்டா பெயர் மாற்றத்துக்கு தான் விண்ணப்பித்துள்ளது குறித்து கூறினார். அதற்கு சோலைராஜ், பட்டா பெயர் மாற்றம் செய்ய நான் கோப்புகளை தயார் செய்து பரிந்துரை செய்தால் தான் உங்களுக்கு தனிப்பட்டா கிடைக்கும், அதற்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரூ.7 ஆயிரம் லஞ்சம்

இதைக்கேட்ட கருப்பன், `நான் வாங்கிய இடத்துக்கே 1997-ம் ஆண்டு ரூ.10 ஆயிரம் தான் கொடுத்தேன். நீங்கள் பட்டா பெயர் மாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்கிறீர்களே. நானே கூலி வேலை செய்கிறேன். அவ்வளவு தொகையை என்னால் எப்படி கொடுக்க முடியும். கொஞ்சம் குறைத்து சொல்லுங்கள்' என்று தெரிவித்துள்ளார்.

உடனே சோலைராஜ் `ரூ.3 ஆயிரம் வேண்டுமானால் குறைத்து கொள்கிறேன். ரூ.7 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுக்க முடியும். இல்லையென்றால், கடந்த முறை போல் இப்போதும் நிராகரித்து விடுவேன்' என்றார். இதனால், பணத்தை ஏற்பாடு செய்து வருகிறேன் என்று கூறிவிட்டு கருப்பன் அங்கிருந்து சென்று விட்டார்.

கிராம நிர்வாக அதிகாரி, புரோக்கர் கைது

இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பன், இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு சென்று நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயனம் தடவிய பணத்தை கருப்பனிடம் கொடுத்து, லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுக்கும்படி கூறினர். இதைத்தொடர்ந்து நேற்று காலை 11.30 மணி அளவில் கிராம நிர்வாக அதிகாரி சோலைராஜிடம் கருப்பன் லஞ்ச பணத்தை கொடுத்தார்.

அதை வாங்கிய சோலைராஜ், அங்கிருந்த புரோக்கர் பாஸ்கரிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார், அவர்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர். பின்னர், லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அதிகாரி சோலைராஜையும், அவருக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் பாஸ்கரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments