புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

விழிப்புணர்வு ஊர்வலம்

புதுக்கோட்டை தாசில்தார் அலுவலக வளாகத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தாசில்தார் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் பழைய பஸ் நிலையம் வழியாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தினை சென்றடைந்தது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு சென்றனர்.

இலுப்பூர்

இலுப்பூரில் வருவாய்த்துறை சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தாலுகா அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் பஸ் நிலையம், கடைவீதி வழியாக அரசு மருத்துவமனை வரை சென்று மீண்டும் தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் மாணவ-மாணவிகள், வருவாய்த்துறை பணியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம். ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும், எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் தாசில்தார் சூரியபிரபு, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மணமேல்குடி

மணமேல்குடியில் வருவாய்த்துறை சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மணமேல்குடி தாசில்தார் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது. 18 வயது நிரம்பியவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். ஊர்வலம் மணமேல்குடி கடைவீதியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று தாசில்தார் அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குடி

ஆலங்குடியில் அரசு ஆண்கள் பள்ளியில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ரெத்தினகுமார் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் காமராஜர்சிலை, அரசமரம், வடகாடு முக்கம், சந்தைப்பேட்டை வழியாக முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள் வாக்களிப்பது ஜனநாயகத்தின் கடமை, வாக்களிப்பது நமது உரிமை, வாக்கு சுதந்திரத்தை பேணி காப்போம் என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷம் எழுப்பி சென்றனர். மேலும் பொதுமக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குடியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை தாசில்தார் பெரியநாயகி த லைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். இதில் ஆசிரியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

ஆவுடையார்கோவில், விராலிமலை

ஆவுடையார்கோவிலில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் தலைமை தாங்கினார். அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு பாதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விராலிமலையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தாசில்தார் கருப்பையா தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் விராலிமலை தாலுகா அலுவலகத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தாலுகா அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments