புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

பறவைகள் கணக்கெடுப்பு

தமிழகத்தில் வனத்துறை மூலம் ஈர நிலங்கள் மற்றும் நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. வனத்துறை அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் தன்னார்வலர்கள், மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

பெரிய கண்மாய், குளங்கள், ஏரிகள், கடற்கரை பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. பைனாகுலர் மூலம் பறவைகளை கண்டறிந்து அதன் விவரங்களை சேகரித்தனர். இதில் அந்த பறவை இனம், இந்திய நாட்டினுடையதா? வெளிநாட்டு வகையை சேர்ந்ததா? என்பதை குறித்துக்கொண்டனர். மேலும் பறவைகளை புகைப்படம் எடுத்தனர்.

கவிநாடு கண்மாய்

புதுக்கோட்டையில் கவிநாடு கண்மாய் பகுதியில் பறவைகள் கூட்டம், கூட்டமாக பறந்தன. மேலும் ஆங்காங்கே மரங்களிலும், முட்செடிகள் மீதும் அமர்ந்திருந்தன. மேலும் சில இடங்களில் மரங்களில் பறவைகள் கூடுகள் கட்டியிருந்தன. புதுக்கோட்டை மாவட்ட வனஅலுவலர் கணேசலிங்கம் தலைமையில், வனச்சரகர் சதாசிவம் மற்றும் குழுவினர் எடுத்த கணக்கெடுப்பில் 38 வகையான பறவைகள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. முதல் நாள் கணக்கெடுப்பில் மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகள் பல இருந்தது தெரியவந்தது. இனப்பெருக்கத்திற்காக வந்திருக்கலாம் எனவும், சில பறவைகள் சீசனில் இங்கு வருவது வழக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர். நீல வால் பஞ்சுருட்டான், உல்லான், இந்திய காட்டுக்காகம், சிறிய நீர்க்காகம், கரிச்சான் குருவி, சிட்டுக்குருவி, சிறு வெண் கொக்கு, நடுத்தர வெண் கொக்கு, மைனா உள்ளிட்ட பறவையினங்கள் கூடுதலாக காணப்பட்டது.

மேலும் மாவட்டம் முழுவதும் 25 இடங்களில் கணக்கெடுப்பு பணி முடிந்ததும் இன்று அதன் விவரங்கள் மொத்தமாக தெரியவரும் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments