படகு போக்குவரத்து தொடங்கப்பட்டதில் இருந்து குருசடை தீவுக்கு 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை வனத்துறை அதிகாரி தகவல்
படகு போக்குவரத்து தொடங்கப்பட்டதில் இருந்து குருசடை தீவுக்கு இதுவரை 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

குருசடை தீவு

ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களுக்கு இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இதில் 13 தீவுகள் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டின் கீழும், மீதமுள்ள தீவுகள் தூத்துக்குடி மாவட்ட கட்டுப்பாட்டின் கீழும் உள்ளன. மண்டபம் கட்டுப்பாட்டில் 7 தீவுகள் உள்ளன. இதில் பாம்பன் குந்துகால் அருகே உள்ளது குருசடை தீவு. இங்கு சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்பட்டதில் இருந்தே சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது 4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு குருசடை தீவுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் பாம்பன் குந்துகால் கடற்கரையில் குவிந்து வருகின்றனர். வனத்துறை சார்பில் இயக்கப்படும் பைபர் படகுகளில் லைப் ஜாக்கெட்(பாதுகாப்பு உடை) அணிந்து குருசடை தீவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் படகிலிருந்து தீவில் இறங்கி அங்கிருந்து தீவின் மறுபக்க கடற்கரை வரை நடந்தே தீவுகளில் உள்ள பலவகை மரம் மற்றும் செடிகளை பார்த்து ரசித்தபடி செல்கின்றனர்.

15 ஆயிரம் பேர்

மேலும், கடலில் உள்ள பவளப்பாறைகளையும் பார்த்துவிட்டு மீண்டும் இறக்கி விடப்பட்ட அதே பகுதிக்கு வந்து படகில் ஏறி தீவு அருகே உள்ள கடல் பகுதியை சுற்றியபடி மீண்டும் குந்துகால் கடற்கரை வந்து இறங்குகின்றனர். இது குறித்து மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் கூறியதாவது:- குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடை தீவுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகின்றன.

படகு போக்குவரத்து தொடங்கப்பட்ட இந்த ஒன்றரை ஆண்டுகளில் இதுவரையிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவுகள் தீவை சுற்றியுள்ள அரியவகை உயிரினங்கள் குறித்து சுற்றுலா பயணிகள் மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments