நடுக்கடலில் மீன்பிடித்தபோது படகு கவிழ்ந்து 20 மணி நேரம் கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் நடந்து வருகிறது. இதனால் நாகை உள்பட பல்வேறு மாவட்ட மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாகையை அடுத்த நாகூரை சேர்ந்த கோடிலட்சம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த செந்தில்குமார்(வயது 30), விஜயகுமார்(20), முகிலன்(18), கணேசன்(50), ராமகிருஷ்ணன்(58) ஆகிய 5 மீனவர்கள் கடந்த 25-ந் தேதி மதியம் கோடியக்கரை மீன்பிடி தளத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது நள்ளிரவில் பலத்த காற்று வீசியதால் படகு கடலில் கவிழ்ந்தது.

இதனால் 5 மீனவர்களும் கடலில் விழுந்து ஐஸ் பெட்டி, டீசல் கேன் ஆகியவற்றை பிடித்துக்கொண்டு 20 மணி நேரம் தத்தளித்தனர். அப்போது மீன்பிடித்துக்கொண்டு திரும்பிய ஜெகதாப்பட்டினம் மீனவர்கள், கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்த நாகூர் மீனவர்களை மீட்டு நேற்று காலை கோடியக்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் 5 மீனவர்களும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் மூழ்கிய படகு, மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments