பாம்பன் ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் பொருத்த 600 டன்னில் தயாரான தூக்குப்பாலம் நகர்த்தி கடல் நடுவே கொண்டு செல்லும் பணி தொடங்குகிறது




பாம்பன் ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் பொருத்துவதற்காக 600 டன்னில் தூக்குப்பாலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை கடலோரத்தில் இருந்து நடுக்கடல் பகுதிக்கு நகர்த்தும் பணி தொடங்க இருக்கிறது.

புதிய ரெயில் பாலம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே 105 ஆண்டுகளை கடந்த பழமை வாய்ந்த ரெயில் பாலத்தின் அருகில் ரூ.550 கோடியில் புதிய ரெயில்வே பாலம் கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இதற்காக கடலுக்குள் 333 தூண்கள் கட்டப்பட்டுள்ளன.

இதில் மண்டபம் பகுதி கடலோரத்தில் இருந்து, கடல் நடுவே பாலத்தின் மையப்பகுதியில் தூக்குப்பாலம் அமையும் இடம் வரை 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் மற்றும் தண்டவாளம் பொருத்தும் பணிகளும், பாலத்தின் ஓரத்தில் மின்கம்பங்கள் பொருத்தும் பணிகளும் முழுமையாக முடிவடைந்துவிட்டன.

தூக்குப்பாலம்

கடல் நடுவே அமைய உள்ள தூக்குப்பாலத்தை பாம்பனில், பாலத்தின் நுழைவுப்பகுதியான கடலோரத்தில், வைத்து வடிவமைக்கும் பணியானது கடந்த 4 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது நிறைவு பெறும் தருவாயில் உள்ளன.

இதுகுறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாம்பன் கடலில் நடைபெற்று வரும் ரெயில்வே பாலத்தின் மிக முக்கிய பணி என்றால் அது மையப் பகுதியில் அமைய உள்ள தூக்குப்பாலத்தை பொருத்துவதுதான். செங்குத்தாக திறந்து மூடும் வகையில், தூக்குப்பாலம் அமைக்கப்பட உள்ளது.

600 டன் எடை

77 மீட்டர் நீளத்திலும், சுமார் 600 டன் எடையிலும், 5 மீட்டர் உயரத்திலும் இந்த தூக்குப்பாலம் தயாராகி இருக்கிறது.

பாலத்தின் நுழைவுப் பகுதியில் வைத்து வடிவமைக்கப்பட்டு இருப்பதால், அங்கிருந்து மையப் பகுதி வரை தூண்கள் வழியாகவே தூக்கு பாலத்தை நகர்த்தி கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம். இதற்காக நகரும் கிரேன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

இன்னும் ஒரு சில நாட்களில் நுழைவு பகுதியில் இருந்து தூக்குப்பாலத்தை நகர்த்தும் பணி தொடங்க இருக்கிறது. இந்த பணி முடிவடைய ஒரு மாதம் ஆகலாம்.

2 மாதத்தில் நிறைவு

மையப்பகுதியில் சரியாக தூக்குப்பாலத்தை பொருத்திய பின்னர் தூக்குப்பாலத்தை இயக்குவதற்கு தேவையான பணிகள் நடைபெறும். அதே நேரத்தில் பாம்பன் பகுதியில் இருந்து மையப்பகுதி வரையிலும் உள்ள தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் மற்றும் தண்டவாளம் பொருத்தும் பணிகளும் நடைபெறும். இன்னும் 2 மாத காலத்திற்குள் பாம்பன் ரெயில் பாலத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என எதிர்பார்க்கிறோம்..

இவ்வாறு அவர் கூறினார்.

தூக்குப்பாலத்தை நகர்த்தும் பணியின் முன்னோட்டமாக நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments