மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகளை பசுமையாக மாற்ற ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு பணிகள் விரைவில் தொடங்குகிறது




புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகளை பசுமையாக மாற்ற ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்குகிறது.

பசுமை பள்ளிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பசுமை பள்ளி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி, கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகளில் சூரிய ஒளி விளக்குகள், சூரிய ஒளி பம்புகளை பயன்படுத்துதல், சூரிய ஒளி ஆழ்குழாய் கிணறு அமைத்தல், மழைநீர் சேகரிப்பு உரக்கிடங்குகள் மற்றும் மண்புழு உரங்கள் தயாரித்தல், காய்கறி தோட்டம், மூலிகை தோட்டம், பழ மரங்கள் நடுதல், நீர் பயன்பாட்டை குறைத்தல், கழிவு நீரை முழு சுழற்சி செய்தல் போன்ற பல்வேறு பசுமை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் நெகிழி இல்லா சுற்றுச்சூழலை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு பள்ளிக்கு ரூ.20 லட்சம் வீதம் 5 பள்ளிகளுக்கும் மொத்தம் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்த மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் தலைமை தாங்கினார். மேலும் பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கி ஒவ்வொரு மாதமும் அதன் அறிக்கையினை முதன்மைக்கல்வி அலுவலர் வழியாக பெற்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு வழங்கி அதனை மாவட்ட கலெக்டருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். பள்ளிகளில் குறிப்பாக சுகாதாரம், பசுமை, மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் முக்கியத்துவம் கொடுக்க பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.

பணிகள் விரைவில் தொடக்கம்

கூட்டத்தில் பசுமை பள்ளிகளின் செயல்பாடுகளை பற்றி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மஞ்சுளா எடுத்துரைத்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகுமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை) ரமேஷ், ராஜேஸ்வரி, பசுமை தோழர் அபிராமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் செந்தில் குமார் ஆகியோர் பசுமைப் பள்ளி திட்டத்தினை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினர்.

இதில் முதன்மை கல்வி அலுவலக (இடைநிலை) நேர்முக உதவியாளர் திருராஜு, 5 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பசுமை பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதில் முதல் கூட்டம் தற்போது நடந்துள்ளது. இனி அடுத்தகட்டமாக அந்தந்த பள்ளிகளில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments