சென்னை & நாகப்பட்டினத்தில், கடல் ஆமை பாதுகாப்பு மையம்; மனோராவில், கடற்பசு பாதுகாப்பு மையம்




காலநிலை மாற்றம் தொடர்பாக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:-

பல்லுயிர் நலன் காக்கும் முயற்சியாக, அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதி ஒன்றை ரூ.50 கோடி மதிப்பீட்டில் அமைக்க, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென முதற்கட்டமாக ரூ.5 கோடியை அரசு வழங்கும். பிற அரசு நிறுவனங்கள், பெரு நிறுவன சமூகப் பொறுப்பு நிதி, தேசிய சுற்றுச்சூழல் அமைப்புகளின் உதவியோடு, அழிந்துவரும் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள உயிரினங்களை பாதுகாக்க உரிய திட்டங்கள் வகுக்கப்படும்.

தமிழ்நாட்டில் 14 கடலோர மாவட்டங்களில் 1,076 கி.மீ. கடற்கரை பகுதியை மையமாகக் கொண்டு கடலோர வளங்களை மீட்டு எடுப்பதற்காக ரூ.1,675 கோடி மதிப்பீட்டில் 'நெய்தல் மீட்சி இயக்கம்' என்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில், கடல் ஆமை பாதுகாப்பு மையங்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் மனோரா பகுதியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் ஒன்றும் அமைக்கப்படும். எண்ணூர் கடற்கழிப் பகுதியினை ரூ.40 கோடி மதிப்பீட்டில் பாதுகாத்து மீட்டெடுப்பதற்கான பணிகள் செயல்படுத்தப்படும்.

சென்னையில் மெரினா கடற்கரை, ராமநாதபுரத்தில் அரியமான், தூத்துக்குடியில் காயல்பட்டினம், திருநெல்வேலியில் கோடாவிளை, நாகப்பட்டினத்தில் காமேஸ்வரம், புதுக்கோட்டையில் கட்டுமாவடி, கடலூரில் சில்வர் கடற்கரை, விழுப்புரத்தில் மரக்காணம் ஆகிய இடங்களில் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகளை தேர்ந்தெடுத்து ரூ.250 கோடி மதிப்பீட்டில் பல மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, நீலக் கொடி கடற்கரைகள் சான்றுகள் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments