பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது: திருவோணம் புதிய தாலுகா இன்று உதயமாகிறது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்




திருவோணம் புதிய தாலுகாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்

நீண்ட நாள் கோரிக்கை

தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருவோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும் என்று கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.இருப்பினும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் காரணமாக இந்த அறிவிப்பு செயல்பாட்டிற்கு வரவில்லை.

இதனைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் திருவோணம் தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருவோணம் தாலுகாவாக அறிவிப்பு

அதன்படி கடந்த 2022-23-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது தஞ்சை மாவட்டம் திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வட்டங்களை சீரமைத்து திருவோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகாவை உருவாக்குவதற்கான பணிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் திருவோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைப்பதற்கான அரசாணையினை தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த புதிய தாலுகாவில் திருநல்லூர், சில்லத்தூர், காவாலிப்பட்டி, வெங்கரை ஆகிய 4 வருவாய் சரகங்களும், 45 கிராமங்களும் இடம் பெற்றுள்ளன.

முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவோணம் தாலுகாவின் தற்காலிக அலுவலகம் திருவோணம் திருமேனிநாதர் கோவில் மண்டபத்தில் செயல்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து திருவோணம் புதிய தாலுகா அலுவலகத்தை இன்று ( திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து திருவோணத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இதுகுறித்து திருவோணம் ஒன்றியக்குழு தலைவர் செல்லம் சவுந்தராஜன் கூறியதாவது:-

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தந்துள்ளார். மேலும் திருவோணம் புதிய தாலுகா உருவாகுவதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார். இவ்வாறான முயற்சிகள் மூலம் தற்போது திருவோணம் புதிய தாலுகாவாக உதயமாகி உள்ளது. இதனால் திருவோணம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments