மணப்பாறை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய தொழிலாளியிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது




மணப்பாறை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய தொழிலாளியிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

விவசாய தொழிலாளி

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா சித்தாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வையாபுரி. விவசாய கூலி வேலை செய்து வரும் இவர் தனது தங்கைக்கு செட்டிசத்திரம் கிராமத்தில் 1,200 சதுரஅடி காலிமனை வாங்கி கொடுத்துள்ளார். இதற்காக அவர் காலிமனைக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார்.

இதைத்தொடர்ந்து சித்தாநத்தம் கிராம நிர்வாக அதிகாரி சிவ செல்வகுமார் (வயது 41) தொலைபேசி மூலம் வையாபுரியை அழைத்து பட்டா பெயர் மாற்றத்துக்கான ஆவணங்களை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

ரூ.1,000 லஞ்சம்

அதன்படி வையாபுரி கடந்த 1-ந்தேதி பட்டா பெயர் மாற்றத்துக்கு தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு சித்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். பின்னர், வையாபுரி அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி சிவசெல்வகுமாரை சந்தித்து ஆவணங்களை கொடுத்தார்.

இதையடுத்து ஆவணங்களை சரிபார்த்த சிவசெல்வகுமார் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பட்டா பெயர் மாற்றம் செய்ய உடனடியாக பரிந்துரை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். அதற்கு வையாபுரி, தான் விவசாய கூலி வேலை செய்து வருவதாக கூறியதால் ரூ.1,000 கேட்டுள்ளார்.

கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வையாபுரி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி ஆகியோரது ஆலோசனையின் பேரில் வையாபுரி ரசாயன பவுடர் தடவப்பட்ட ஆயிரம் ரூபாயை நேற்று மதியம் கிராம நிர்வாக அதிகாரி சிவசெல்வகுமாரிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments