சுனாமி மறுவாழ்வு ஒப்பந்த பணியில் போலி பத்திரங்களை கொடுத்த 3 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு




சுனாமி மறுவாழ்வு ஒப்பந்த பணியில் போலி பத்திரங்களை கொடுத்த 3 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

போலி பத்திரங்கள்

சுனாமி மறுவாழ்வு பணிகளுக்கு விடப்பட்ட ஒப்பந்தங்களில் அரசு ஒப்பந்தங்களை பெற போலியாக வங்கி உத்தரவாத பத்திரங்களை கொடுத்து அரசை ஏமாற்றியதாக சுனாமி மறுவாழ்வு திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவில் 5 சட்டப்பிரிவுகளில் புகார் அளித்தார். அதன்பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. புலன் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அதன்பின் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை முடிந்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணை முடிவு பெற்று குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பு கூறினார்.

2 ஆண்டுகள் சிறை

இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பாரதியார் தெருவை சேர்ந்த ரங்கநாதன், அறந்தாங்கி கே.எல்.ஆர். எம்.கே.எல். குடியிருப்பை சேர்ந்த தனசேகரன் ஆகியோருக்கு ஒவ்வொரு சட்டப்பிரிவின் கீழ் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அதேபோல் அறந்தாங்கி எழில் நகரை சேர்ந்த சேதுராமன் என்பவருக்கு ஒவ்வொரு சட்டப்பிரிவின் கீழ் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், மற்றொரு பிரிவில் சேதுராமனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். இதனால் 3 பேரும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிப்பார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments