நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுக்கு யாரும் பணம் கொடுத்தால் வீடியோ எடுத்து தேர்தல் கமிஷனுக்கு அனுப்பலாம் தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி




நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம், பரிசு பொருள் கொடுப்பதை தடுக்க ‘சி-விஜில்’ என்ற செல்போன் செயலியை தேர்தல் கமிஷன் உருவாக்கியுள்ளது. தேர்தல் முறைகேடுகள் குறித்து வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து பொதுமக்கள் அந்த செயலி மூலம் அனுப்பலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

வாக்குச்சாவடிகள்

இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 68 ஆயிரத்து 154 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதிகபட்சமாக 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற விகிதத்தில் அமைக்கப்படும். சில இடங்களில் மட்டும் 800 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை வித்தியாசப்படுவதாக சில அரசியல் கட்சிகள் புகார் கூறுகின்றனர். அதற்காகத்தான் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 விவிபேட் எந்திரங்களில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளை எண்ணிப் பார்ப்போம். அந்த விவிபேட் எந்திரத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள எண்ணிக்கையும் விவிபேடில் உள்ள எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா? என்பதையும் சரிபார்ப்போம். சரியாக இருப்பதை அங்கிருக்கும் அரசியல் கட்சிகள் முன்னிலையில் உறுதிப்படுத்திக்கொள்வோம்.

எத்தனை எந்திரங்கள்?

நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டாலும்கூட வேட்பு மனுதாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்புவரை, முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். அந்த மாறுதலை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கைவசம் உள்ளன. கூடுதலாக 20 சதவீதம் அளவுக்கு எந்திரங்கள் உள்ளன. தேர்தல் பணிக்கான அலுவலர்கள், அதிகாரிகளையும் தயார்ப்படுத்தி வருகிறோம். வாக்குப்பதிவு செய்யும் ‘பேலட் யுனிட்' 1 லட்சத்து 70 ஆயிரம், கண்ட்ரோல் யுனிட் என்ற கட்டுப்பாட்டு எந்திரங்கள் 93 ஆயிரம், விவிபேட் 99 ஆயிரம் உள்ளன. அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் 2 எந்திரங்கள் வைக்கப்படும்.

ஓட்டுக்கு பணம் கொடுத்தால்...

வீடு வீடாகச் சென்று ஓட்டுக்கு பணம், பரிசு கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் 2 வழிமுறைகளை வகுத்துள்ளது. ஒன்று, சி-விஜில் என்ற செல்போன் செயலி. அதில் தேர்தல் முறைகேடுகள் குறித்தும் வாக்காளர்களுக்கு பரிசு பொருள், பணம் கொடுப்பது பற்றியும் செல்போனில் வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து அந்த செயலி மூலம் அனுப்பலாம். புகார் அளிப்பவர் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அதை ஆதாரமாக வைத்து தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கைகளை எடுக்கும். பழைய வீடியோவை அனுப்பினால் உடனே தெரிந்துவிடும். அடுத்ததாக, இ.எஸ்.எம்.எஸ். மூலமாகவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதில் வரும் புகார்கள், அனைத்து அதிகாரிகளும் காணும் வகையில் இருக்கும். இது, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து மாவட்ட அளவிலான அதிகாரிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெரிய அளவிலான பணப்பரிமாற்றங்களை, சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம் உடனடியாக அறிய முடியும். இந்த தொழில்நுட்பம் மூலம் பொதுமக்கள் எங்களுக்கு உதவலாம்.

பார்வையாளர்கள்

வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்டங்களுக்கு கொண்டு வந்தபோது அரசியல் கட்சிகள் முன்னிலையில் அவற்றை சோதித்து சரி பார்த்துவிட்டோம். தேர்தலின்போது, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொதுப் பார்வையாளர், ஒரு செலவினப் பார்வையாளர், 2 போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 4 பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளாக இருப்பார்கள்.

அந்தவகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளும் மற்ற மாநிலங்களின் தேர்தல் பார்வையாளர்களாக செல்லவுள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இந்திய தேர்தல் கமிஷன் சார்பில் வரும் 11-ந் தேதியன்று பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. புதுடெல்லியில் இருந்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நடத்தும் பயிற்சி வகுப்பு, காணொலி வழியாக நடைபெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், பார்வையாளர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேர்தல் பணிக்காகச் செல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments