பட்டுக்கோட்டை அருகே ரூ.2¼ கோடியில் புதிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்




பட்டுக்கோட்டை அருகே ரூ.2¼ கோடியில் கட்டப்பட்ட புதிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டை பகுதியில் செயல்பட்டு வந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தின் கீழ் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதி மக்களின் வாகனங்கள் பதிவு செய்தல், ஓட்டுனர் உரிமம் எடுத்தல், அதுபோல் வாகன ஓட்டுனர் மற்றும் பதிவு உரிமைகள் புதுப்பித்தல் போன்ற பணிகள் நடந்து வந்தன.

இந்த அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கியதாலும், இட பற்றாக்குறை ஏற்பட்டதாலும், வாகன சோதனை செய்வதற்கு போதுமான இடங்கள் இல்லாததாலும் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஏனாதி கிராமத்தில் புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறையினரால் புதிய வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டது. இதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அண்ணாதுரை எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஏனாதி பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளி கட்டிடம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை ஊராட்சியின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த பள்ளி கட்டிடம் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சார்பில் கட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் அண்ணாதுரை எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் வாழ்த்தி பேசினார். மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா புகழேந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி, கோவிந்தராஜன், செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments