மீமிசல் அருகே இறால் பண்ணையில் பதுக்கிய ரூ.110 கோடி போதைப்பொருள் சிக்கியது கடத்தல்காரர்கள் யார்? அதிகாரிகள் தீவிர விசாரணை




மீமிசல் அருகே இறால் பண்ணையில் பதுக்கிய ஹாசிஸ் கஞ்சா என அழைக்கப்படும் லேகியம் வடிவிலான ரூ.110 கோடி போதைப்பொருள் சிக்கியது. கடத்தல்காரர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு அவ்வப்போது பீடி இலை, பீடி பண்டல், கஞ்சா, போதைப்பொருட்கள், மருந்து பொருட்கள், மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக மெத்தாபெட்டமைன் போன்ற போதைப்பொருள் கடத்தலும் அதிகரித்து உள்ளது.

இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் ஒரு அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான கஞ்சா பார்சல்கள் அடங்கிய மூடைகளை நேற்று முன்தினம் இரவு சுங்க நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த மூடைகளை ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

ஹாசிஸ் கஞ்சா

அங்கு கஞ்சா மூடைகள் அனைத்தையும் நேற்று சுங்கத்துறையின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பிரித்து பார்த்து சோதனை செய்து எடை போட்டனர்.

அப்போது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது ‘ஹாசிஸ் கஞ்சா’ என்றொரு வகை போதைப்பொருள் சுமார் 100 கிலோ அளவுக்கு, சிறிய அளவிலான ஏராளமான பார்சல்களாக சிக்கி இருந்ததும் தெரியவந்தது. ஹாசிஸ் கஞ்சாவும், கஞ்சா இலைகளில் இருந்து தயாரிக்கப்படுவதுதான் என்றும், அல்வா மற்றும் லேகியம் போன்று மாற்றி, பார்சல்களில் பக்குவமாக அடைத்து கடத்தலுக்கு தயார்படுத்தி உள்ளனர்.

இவ்வாறு லேகியம் போன்று கஞ்சா இருந்த (ஹாசிஸ் கஞ்சா) பார்சல்களின் சர்வதேச மதிப்பு ரூ.110 கோடி இருக்கும் என்று சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுதவிர கஞ்சா பார்சல்கள் மட்டும் 872 கிலோ அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளன.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து சுங்கத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் கைப்பற்றப்பட்ட இந்த கஞ்சா மூடைகளை பதுக்கி வைத்த கடத்தல்காரர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றோம். இதில் லேகியம் வடிவிலான ஹாசிஸ் கஞ்சா அதிக போதை ெகாடுக்கக்கூடியது. அதனால்தான் விலையும் மிக அதிகம்” என்றார்.

ஏற்கனவே கடந்த வாரம் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்கு அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் ரூ.110 கோடி மதிப்புள்ள ஹாசிஸ் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments