சென்னை சென்டிரல் - மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்




சென்னை சென்டிரல் - மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

வந்தே பாரத் ரெயில்

சென்னை சென்டிரல் - மைசூரு இடையே ஏற்கனவே ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பயணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த வழித்தடத்தில் 2-வது வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் குஜராத்தில் இருந்து நேற்று தொடங்கி வைத்தார். இதுதவிர மேலும் 9 வந்தே பாரத் ரெயில் சேவையையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து வந்தே பாரத் ரெயிலை தொடங்கிவைத்தனர். அப்போது தெற்கு ரெயில்வே கூடுதல் தலைமை மேலாளர் கவுஷல் கிஷோர், பொது மேலாளர் விஸ்வநாத் ஈரைய்யா உடன் இருந்தனர்.

கலந்துரையாடல்

காலை 9.40 மணியளவில் வந்தே பாரத் ரெயில் சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டது. அப்போது அங்கிருந்த பா.ஜனதாவினர் பூக்களை தூவி ரெயிலை வழியனுப்பி வைத்தனர். இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதையடுத்து மதியம் 2.05 மணியளவில் ரெயிலானது பெங்களூரு சென்றடைந்தது. தமிழகத்தில் இயக்கப்படும் முதல் ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரெயில் இதுவாகும்.

ரெயில்வே திட்டங்கள் விவரம்

குஜராத்தில் நடந்த விழாவில், பிரதமர் மோடி வந்தே பாரத் ரெயில் உள்பட ரூ.85 ஆயிரம் கோடி ரெயில்வே மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.

அவற்றில் 222 ரெயில்வே சரக்கு வைப்பிடங்கள், 51 கதிசக்தி மல்டி-மோடல் சரக்கு முனையங்கள், 2,646 டிஜிட்டல் கட்டுப்பாட்டு நிலையங்கள், 35 ரெயில்வே பட்டறைகள், லோகோ ஷெட்கள், பிட் லைன்ஸ்/கோச்சிங் டெப்போக்கள், 1,500 கி.மீ. தூரத்துக்கு இரட்டை ரெயில் பாதை அமைத்தல், 80 ரெயில்பாதை பிரிவுகளில் 1,045 கி.மீ. தூரத்துக்கு தானியங்கி சிக்னல் தொகுதிகள் அமைத்தல்,

35 ரெயில் பெட்டி உணவகங்கள் அமைத்தல், 1,500-க்கும் மேற்பட்ட ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு ஸ்டால்கள், 975 சூரிய ஒளிசக்தி நிலையங்கள் நிறுவுதல், 2,135 கி.மீ. தூர ரெயில்பாதை பிரிவுகளை மின்மயமாக்குதல், 401 கி.மீ. தூர புதிய குர்ஜா-சனேவால் கிழக்கு சரக்கு வழித்தட பிரிவு தொடக்கம்,

244 கி.மீ. தூர புதிய மகர்புரா-புதிய கோல்வாட் மேற்கு சரக்கு வழித்தட பிரிவு தொடக்கம், ஆமதாபாத் செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையம், பால்டன்-பாராமதி புதிய ரெயில்பாதை, 9 மின்இழுவை அமைப்புகளை மேம்படுத்தும் பணி ஆகியவை அடங்கும். 50 புதிய மக்கள் மருந்தகங்களும் திறக்கப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments