பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் நடுவில் பொருத்துவதற்காக 700 டன் எடையில் தயாரான தூக்குப்பாலத்தை நகர்த்தும் பணி தொடங்கியது கருவிகள் மூலம் நாள்தோறும் சிறிது தூரம் நகர்த்த ஏற்பாடு




பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் மையப் பகுதியில் பொருத்துவதற்காக 700 டன் எடையில் தயாரான தூக்குப்பாலத்தை நகர்த்தும் பணி தொடங்கியது. நாள்தோறும் சிறிது தூரம் கருவிகள் துணையுடன் நகர்த்தப்படுகிறது.

புதிய ரெயில் பாலம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.550 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்காக கடலுக்குள் 333 தூண்கள் கட்டப்பட்டுள்ளன.

மண்டபத்தில் இருந்து மையப்பகுதி தூக்குப்பாலம் வரையிலும் தூண்கள் மீது இரும்பு கர்டர் அமைத்து, அதன் மீது தண்டவாளங்கள் பொருத்தும் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. இதனிடையே மையப்பகுதியில் அமைய உள்ள தூக்குப்பாலத்தை வடிவமைக்கும் பணி 6 மாதங்களுக்கு மேலாக, பாம்பனில் ரெயில் பாலத்தின் நுழைவு பகுதியில் நடைபெற்றது.

வடிவமைக்கப்பட்ட தூக்குப்பாலத்தை தூண்கள் வழியாகவே நகரும் கிரேன் மூலம் நகர்த்தும் பணி தற்போது தொடங்கி உள்ளது. ரெயில்ேவ கட்டுமான நிறுவனமான ஆர்.வி.எல். துணை பொதுமேலாளர் சீனிவாசன் தலைமையில் அதிகாரிகள், பணியாளர்கள் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாள்தோறும் சிறிது தூரம்

77 மீட்டர் நீளம், 700 டன் எடையில் தயாரான தூக்குப்பாலத்தின் அடிப்பகுதியில் கேன்ட்ரி எனும் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தூக்குப்பாலம் தற்போது நகர்த்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் பொருத்துவதற்காக தூக்குப்பாலத்தை தற்போது நகரும் கேன்ட்ரி மற்றும் கருவிகள் மூலம் தூண்கள் வழியாக நகர்த்தும் பணி தொடங்கியுள்ளது. நாள்தோறும் சிறிது தூரம் மட்டுமே நகர்த்த முடியும் என்பதால், இன்னும் ஒரு மாதத்திற்குள் தூக்குப்பாலத்தை மையப்பகுதிக்கு கொண்டு சென்று, பின்னர் தூண்கள் மீது சரியாக பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. புதிய ரெயில் பால பணிகள் இன்னும் 3 மாதத்திற்குள் முழுமையாக முடிவடைய வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments