பறவைகளின் அழகை ரசிப்பதற்காக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரத்திற்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை




மாங்குரோவ் காடுகளில் வலசை வரும் பறவைகளின் அழகை ரசிக்க பயன்படும் கண்காணிப்பு கோபுரத்திற்கு செல்ல பாலம் அமைத்துதர வேண்டி சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாங்குரோவ் காடுகள்

தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளது. இங்கு வனத்துறையினர் கிராம மக்களுடன் இணைந்து சூழல் மேம்பாட்டு குழுவை அமைத்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரியை இயக்கி வருகிறது. சுமார் 5 கிலோ மீட்டருக்கு கண்ணுக்கு விருந்தாக மாங்குரோவ் காடுகள் காட்சியளிப்பதால் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து படகு சவாரி செய்து மாங்குரோவ் காடுகளின் அழகை ரசிக்கின்றனர்.

மேலும் இப்பகுதிக்கு வரும் அழகிய வண்ண வண்ண பறவைகளின் கூட்டங்களையும், அதன் ஓசைகளையும் கண்டு ரசிப்பதுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இந்த சுற்றுலா பயணிகள் பறவைகளின் அழகை ரசிப்பதற்காக வனத்துறை மூலம் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் மீது ஏறி நின்று மாங்குரோவ் காடுகளின் அழகையும், பறவை கூட்டங்களையும் கண்டு ரசிக்கலாம். ஆனால் இங்குள்ள கண்காணிப்பு கோபுரத்திற்கு செல்ல பாலம் அமைக்கப்படாததால் கோபுரம் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது.

கண்காணிப்பு கோபுரம்

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்காணிப்பு கோபுரத்திற்கு சென்று அதன் அழகை ரசிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வருகின்றனர். ஆனால் அவர்களால் அங்கு செல்ல முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கண்காணிப்பு கோபுரத்திற்கு செல்ல பாலம் அமைத்து தர வேண்டி தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் கடலின் அழகை ரசிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும். பெண்கள் உடை மாற்றும் அறை, படகு சவாரி செய்ய பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள், கூடுதல் படகுகள் வசதி போன்ற வசதிகளை செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments