சிதிலமடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க நரிக்குறவ இன மக்கள் முடிவு போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு




சிதிலமடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டித்தர கோரிக்கை விடுத்து கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்த நரிக்குறவ இன மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிதிலமடைந்த வீடுகள்

அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் கிராமத்தில் நரிக்குறவர் பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தமிழக அரசு இவர்களுக்கு 1977-ம் ஆண்டு குடியிருக்க கான்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது. தற்போது அந்த வீடுகள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

எனவே பழுதடைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும் என நரிக்குறவ மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

போஸ்டர்களால் பரபரப்பு

இந்தநிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் எங்கள் பகுதிக்கு யாரும் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நரிக்குறவ இன மக்கள் கூறியதாவது:-

கூத்தாடிவயல் கிராமத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு தமிழக அரசு வீடுகளை கட்டி கொடுத்துள்ளது. அதில் கடந்த 45 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களது வீட்டின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் கொட்டி விட்டன. மழைக்காலங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது.

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு

இப்பகுதி மக்களின் வீடுகள் சில மழையில் இடிந்து விட்டன. இதில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவருக்கு இடுப்பு உடைந்து விட்டது. ஒருவர் பலியாகி விட்டார். இதைக்கண்டித்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அவரது உடலை வைத்துக்கொண்டு அதிகாரிகளிடம் முறையிட்டோம். மனுக்கள் கொடுத்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பட்டுக்கோட்டை சாலையில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு மறியலில் ஈடுபட்டோம்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்களது வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க நாங்கள் முடிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments