பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கலெக்டர் தகவல்




பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. எனவே அரசு அலுவலகங்களில் அரசியல் சார்ந்த படங்கள், காலண்டர், பிரதமர், முதல்-அமைச்சர், அமைச்சர்களின் படங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இறந்துபோன தேசிய தலைவர்கள், கவிஞர்கள், இந்திய ஜனாதிபதி மற்றும் கவர்னர் புகைப்படம் அலுவலகங்களில் வைத்துக்கொள்ள தடையில்லை.

தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களில் தேசிய கொடிகள் பயன்படுத்த அனுமதி இல்லை. துறை சார்ந்த நலத்திட்ட விழாக்கள் நடத்திட அனுமதியில்லை. சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் கால்நடைகள் மருத்துவ சிகிச்சைகளின் போது விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது.

குற்றவியல் நடவடிக்கை

தனியாருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அனுமதியற்ற அரசியல் விளம்பரமும் ஆணையத்தால் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும். அரசியல் கட்சி, வேட்பாளர் அல்லது தேர்தலுடன் தொடர்புடைய நபர் அலுவலக வாகனத்தை பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

தேர்தல் பணியின் போது, எந்த ஒரு அமைச்சரும் தன் தொகுதிக்கு தனிப்பட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும்போது அவரை யாரேனும் ஒரு அரசு அலுவலர் சந்தித்தால், பணி விதிகளின்படி அந்த அரசு அலுவலர் நடத்தை தவறிய குற்றவாளியாக கருதப்படுவார். மேலும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்களை சரி செய்தல் போன்றவை தேவை என்றால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அப்பணிகளை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் கட்டுப்பாட்டு அறை

இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக மையம், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. ஐஸ்வர்யா உள்பட பலர் உடன் இருந்தனர்.

ஜல்லிக்கட்டு

இதையடுத்து கலெக்டர் மெர்சி ரம்யா நிருபர்களிடம் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 36 ஆயிரத்து 605 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 1,569 வாக்குச்சாவடி மையங்கள் உள்ள நிலையில் அதில் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டத்தில் 18 பறக்கும் படையினரும், 18 நிலையான கண்காணிப்பு குழுவினரும், 6 வீடியோ கண்காணிப்பு குழுவினரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒரு குழுவுக்கு 3 பேர் வீதம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். மேலும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 18004252735 கட்டணமில்லா எண்ணுக்கும், அதேபோல் தொலைபேசி எண்:- 04322-229860, 229870, 229880 என்ற எண்ணுக்கும் புகார் தெரிவிக்கலாம்.

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தோடு கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் தொடர்பாக துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டி அச்சடிப்பவர்கள் அவர்களது நிறுவன பெயரை நிச்சயம் அச்சடிக்க வேண்டும். தேர்தல் தொடர்பாக துண்டு பிரசுரங்கள் அச்சடிப்பவர்கள் அது தொடர்பான விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். விதிமுறைக்கு மாறாக யாரேனும் துண்டு பிரசுரங்களை அச்சடித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறை தண்டனை

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவரது பெயரில் அல்லது அவரது தேர்தல் முகவரி பெயரில் தனி வங்கி கணக்கு தொடங்கி அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாள் வரையான அனைத்து தேர்தல் செலவினங்களுக்கும் சரியான கணக்கு பராமரிக்க வேண்டும். தேர்தல் வாக்குரிமையை பயன்படுத்த, வெகுமதியளிக்கும் நோக்கத்துடன் கையூட்டு வழங்கினால் பொதுமக்கள் தனக்காகவோ அல்லது பிறருக்காகவோ அதை பெற்றால் இந்திய தண்டனை சட்டத்தின் படி குற்றத்திற்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது 2 தண்டனையும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments