தேர்தல் நடத்தை விதிகள் அமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்ல தடை தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி




தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி மீறலை கண்காணிக்க 1,404 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பணம் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

கண்காணிப்புப் பணி

புதுடெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியான பிறகு பத்திரிகையாளர்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவை ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ந் நடக்கிறது. வரும் 20-ந் தேதி தேர்தல் அறிவிப்பாணை வெளியாவதைத் தொடர்ந்து அன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை 28-ந் தேதியும், மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 30-ந் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன. இனி மாவட்டங்களில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படை, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியோர் தங்கள் பணியை தொடங்கிவிடுவார்கள். தேர்தல் செலவினம் தொடர்பான குழுக்களின் கண்காணிப்பு தொடங்கியுள்ளது. இனி தேர்தல் கமிஷனின் உத்தரவுகளை நிறைவேற்றுவோம்.

ஏன் முதல் கட்டம்?

85 வயதுக்கு மேல் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கு சென்று படிவம் 12-டி விண்ணப்பங்கள் தரப்பட உள்ளன. வாக்குச்சாவடிக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க விரும்பினால், அவர்கள் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். 12-டி படிவங்களை வரும் 25-ந் தேதி வரை பூர்த்தி செய்து வழங்கலாம்.

தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் இருந்தும் இந்திய தேர்தல் கமிஷன் தகவல்களைப் பெற்றது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் முதல் கட்டமாக தேர்தலை நடத்தும் முடிவை எடுத்துள்ளனர். கடந்த முறை இங்கு 2-வது கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.

ஒரு இடைத்தேர்தல்

சட்டசபை இடைத்தேர்தலை பொறுத்தவரை, விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே ஏப்ரல் 19-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் கமிஷன் அளித்த செய்திக்குறிப்பில் முதலில் இடைத்தேர்தல் பட்டியலில் திருக்கோவிலூர் தொகுதியும் இடம் பெற்றிருந்தது. பின்னர் வெளியிடப்பட்ட கூடுதல் அறிக்கையில் திருக்கோவிலூர் தொகுதி இடம்பெறவில்லை. பொன்முடி எம்.எல்.ஏ.வாக தொடர்கிறார். அமைச்சரவையில் புதிய அமைச்சரை சேர்க்க அரசு பரிந்துரைத்தால், அவரது பதவியேற்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான குழு பரிசீலிக்கும். பின்னர் அதுபற்றிய அறிக்கையை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கும். தேர்தல் கமிஷன் என்ன முடிவை அறிவிக்கிறார்களோ, அதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும். புதிய உத்தரவுகளையும், புதிய திட்டப் பணிகளையும் இனி மேற்கொள்ள முடியாது.

போலித் தகவல்கள்

மதம், சாதி அடிப்படையில் வாக்காளர்களிடம் அரசியல் கட்சிகள் ஓட்டு கேட்கக்கூடாது. மத ரீதியான நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். அதற்கு தடை உள்ளதாக தகவல் இல்லை. போலியான தகவல்களை பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட வலைதளங்களில் பரப்புவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தேர்தல் கமிஷன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக தமிழகத்திற்கு இதுவரை 25 துணை ராணுவப் படைகள் வந்துள்ளன. வாக்குச்சாவடிகளுக்கு எத்தனை பேர் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட வேண்டும்? என்பதெல்லாம் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விரைவில் மீதமுள்ள துணை ராணுவ படைகளும் தமிழகத்துக்கு வந்து சேரும்.

ரொக்கப் பணம்

இனி ஒவ்வொருவரும் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரைதான் ரொக்கப் பணத்தை கொண்டு செல்ல முடியும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. அந்தத் தொகையில் தேர்தல் கமிஷன் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் விரைவில் தமிழகம் வரவுள்ளனர். ஓட்டுப் பதிவுக்கு 7 நாட்களுக்கு முன்பு பூத் சிலிப் வினியோகிக்கப்படும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பட்டுவாடா செய்யப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து தொடரப்பட்ட வழக்குகள், தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான வழக்குகள் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

1,404 படைகள்

அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நாளை (திங்கட்கிழமை) தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடக்கிறது. துணை ராணுவ படையினருடன் இணைந்து பறக்கும் படையினர் வாகன சோதனைகளை இப்போது முதலே தொடங்கி விட்டனர். வாக்குப்பதிவின் போது, எந்திரங்கள் வைக்கப்படும் வரிசையில் பழைய நிலையே தொடரும்.

234 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும்படை மற்றும் 3 நிலையான கண்காணிப்பு படை (மொத்தம் 1,404 படைகள்) அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை மேற்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments