1-ந்தேதி முதல் ‘பூத் சிலிப்' வினியோகம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்




வாக்காளர்களுக்கு வருகிற 1-ந்தேதி முதல் ‘பூத் சிலிப்’கள் வினியோகம் செய்யப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்காளர் எண்ணிக்கை உயர்வு

கடந்த ஜனவரி 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதன் பின்னரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை சரிபார்த்து, புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்த்துள்ளோம்.அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 ஆக உள்ளது.

அதில் ஆண்கள் 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367; பெண்கள் 3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 69; மூன்றாம் பாலினத்தவர் 8,465 பேர் உள்ளனர். முதல்முறை வாக்களிப்போர் (19 வயதுக்கு உட்பட்டவர்கள்) 10 லட்சத்து 90 ஆயிரத்து 574 பேர்.

புதிய துணை வாக்குச்சாவடிகள்

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், இதுவரை 68 ஆயிரத்து 144 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1,500-க்கும் அதிகமாக வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து 177 புதிய துணை வாக்குச்சாவடிகளை உருவாக்க உள்ளோம். அவை, ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அருகில் அமைக்கப்படும். தமிழகத்தில் 39 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்படும்.

தபால் ஓட்டு

தமிழகத்தில் மொத்தம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 730 மாற்றுத்திறன் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 65 ஆயிரத்து 875 பேர் தபால் ஓட்டுப்போடுவதற்கான 12-டி விண்ணப்பத்தை பெற்றனர். அவர்களில் 50 ஆயிரத்து 676 பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். பூர்த்தி செய்து கொடுத்தவர்களுக்கு மட்டும் அவர்களின் வீடுகளுக்குச் சென்று ஓட்டுச் சீட்டு தரப்பட்டு, தபால் ஓட்டுகள் பெறப்படும். மற்றவர்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கலாம்.85 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 6 லட்சத்து 13 ஆயிரத்து 991 பேர்கள் உள்ளனர். அதில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 734 பேர் தபால் ஓட்டு விண்ணப்பங்களைப் பெற்றனர். அவர்களில் 77 ஆயிரத்து 435 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். மற்றவர்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கலாம்.

பார்வையாளர்கள்

தேர்தல் பணிக்காக 7 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பயிற்சி தரப்படும். 3 நிலைப் பயிற்சிகளும் வரும் ஏப்ரல் 18-ந் தேதிக்குள் நிறைவு பெற்றுவிடும். தமிழகத்தில் தேர்தலுக்காக 39 பொதுப் பார்வையாளர்கள், 20 போலீஸ் பார்வையாளர்கள், 58 செலவினப் பார்வையாளர்கள் வந்துள்ளனர். இவர்கள் பற்றிய தகவல்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிடுவார்கள்.

அவர்களை மக்களும் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் ‘வெப்கேமரா' வைத்து வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும்.

ரூ.70 கோடி பறிமுதல்

பணம், பரிசுப் பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மொத்தம் 702 பறக்கும்படை, 702 நிலையான கண்காணிப்புக் குழு, 234 வீடியோ கண்காணிப்புக் குழு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.அவர்கள் மூலம் இதுவரை ரூ.69.79 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் ரூ.33.31 கோடி ரொக்கப் பணமும், ரூ.33.35 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட பொருட்களும் அடங்கும். வருமான வரித்துறையினர் தனியாக ரூ.6.51 கோடி பணம் பறிமுதல் செய்துள்ளனர். எனவே பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் மட்டுமே ரூ.39.82 கோடியாக உள்ளது.இதுவரை பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 648 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் விளம்பரங்களுக்காக 31 அனுமதிச் சான்றிதழ்கள் தரப்பட்டுள்ளன.

பொதுச் சுவர்களின் வரையப்பட்ட 3.16 லட்சம் விளம்பரங்களும், தனியார் சுவர்களில் அனுமதியின்றி வரையப்பட்ட 1.16 லட்சம் விளம்பரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

’பூத் சிலிப்’ வினியோகம்

பூத் சிலிப் வினியோகம் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 13-ந் தேதிக்குள் நிறைவடையும். இந்தப் பணியில் அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை.

மத்திய அரசு பணியில் உள்ள 7 ஆயிரத்து 851 மைக்ரோ அப்சர்வர்கள் விரைவில் பணிகளை தொடங்குவர். 26-ந் தேதிவரை 781 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இருக்கை, 'சாமியானா' பந்தல் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரம் முழுக்க முழுக்க தேர்தல் கமிஷன் தொடர்புடையது.

பிரதமர் குறித்து அவதூறு பேசியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 294 (பி) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அறிக்கை பெற்றதும் அது தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments