காலாவதியான பூச்சி மருந்தால் கருகிய நெற்பயிர்கள்: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை செல்போன் கோபுரத்தில் ஏறி போராடியதால் பரபரப்பு




காலாவதியான பூச்சி மருந்தால் நெற்பயிர்கள் கருகியதை கண்டித்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். செல்ேபான் கோபுரத்தில் ஏறி போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்து

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மறவனூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். விவசாயியான இவர், 10 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் ரூ.5 ஆயிரத்து 500-க்கு பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி சென்று அவர் 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த நெல்லுக்கு தெளித்தார். அவர் வாங்கி சென்ற பூச்சிக்கொல்லி மருந்து 8½ ஏக்கருக்கு மட்டுமே வந்துள்ளது.

இந்நிலையில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த 10 தினங்களில் 8½ ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் கருகி சேதமடைந்தன. ஆனால் மருந்து தெளிக்காத 1½ ஏக்கர் நெற்பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளது. இந்நிலையில், விராலிமலையில் செயல்படும் தனியார் நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தால் தான் நெற்பயிர்கள் சேதமடைந்து விட்டதாகவும், காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்தை தனியார் நிறுவனத்தினர் வழங்கி இருப்பதாக கூறி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செந்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

முற்றுகை போராட்டம்

அதேபோல் விராலிமலை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சுமார் ரூ.5 லட்சம் செலவு செய்து பயிரிட்ட நெற்பயிர்கள் கருகி சேதமடைந்து விட்டதாக கூறி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சேதமடைந்த நெற்பயிர்களை கையில் ஏந்தியும், நெல்மணிகளை கீழே கொட்டியும் முற்றுகையிட்டனர். மேலும் கோஷங்களை எழுப்பியும், பாட்டு பாடி ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீசார், வருவாய்த்துறையினர், வேளாண்மை துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

செல்போன் கோபுரத்தில் ஏறி...

இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 2 பேர் பிச்சத்தான்பட்டி ரவுண்டானா அருகே மாலையீடு செல்லும் சாலையில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் ேகாரிக்கைக்கு வேளாண்மை துறையினர், மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே செல்போன் கோபுரத்திலிருந்து கீழே இறங்குவோம் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கவில்லை. இதுகுறித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு போலீசார் பேசினர். மாவட்ட கலெக்டர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையடுத்து செல்போன் கோபுரத்தில் ஏறி நின்ற விவசாயிகள் 2 பேரையும் தீயணைப்பு வீரர்கள் கீழே இறக்கி கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது. செல்ேபான் கோபுரத்தில் விவசாயிகள் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேளாண்மை அலுவலகம் முற்றுகை

இந்நிலையில் விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மணிகண்டன் தனியார் பூச்சிமருந்துக்கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து மறு உத்தரவு வரும் வரை கடையை மூட உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அதிகாரிகள் உத்தரவிட்ட பின்னரும் விராலிமலையில் உள்ள பூச்சிமருந்து கடையில் வியாபாரம் நடந்தது. இதனை பார்த்து ஆத்திரமடைந்த விவசாயிகள் விராலிமலை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து வேளாண்மை உதவி இயக்குனர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு சென்று கடை மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ததை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments