புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 லட்சத்து 42 ஆயிரம் வாக்காளர்கள் கலெக்டர் மெர்சிரம்யா தகவல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 லட்சத்து 42 ஆயிரத்து 206 வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

பறக்கும் படை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம் சட்டமன்ற தொகுதியில் வாகன சோதனையில் பறக்கும்படையினர் நேற்று ஈடுபட்டனர். அப்போது மாவட்ட தோ்தல் அதிகாரியும், கலெக்டருமான மெர்சி ரம்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பறக்கும்படையினர் முறையாக வாகன சோதனையில் ஈடுபடுகின்றனரா? என்பதை பார்வையிட்டார்.

வாக்குச்சாவடிகள்

அதனைத்தொடர்ந்து, நச்சாந்துப்பட்டியில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் பருவம்-தேசத்தின் பெருமிதம் என்ற உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். மேலும் தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,560 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம் சட்டமன்ற தொகுதியில் 274 வாக்குச்சாவடி மையங்களும், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 242 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன.

மொத்த வாக்காளர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 42 ஆயிரத்து 206 வாக்காளர்கள் உள்ளனர். இதில் திருமயம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 668 வாக்காளர்களும், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 899 வாக்காளர்களும் உள்ளனர். இந்த தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிகழ்வுகளில், தாசில்தார் புவியரசன், வருவாய் ஆய்வாளர் உத்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெகதீசன், சிவசக்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments