திருச்சியில் அதிகாலையில் விபத்து: லாரி மீது ஆம்னி பஸ் மோதல்; டிரைவர் உள்பட 2 பேர் பலி 15 பயணிகள் காயம்




திருச்சியில் அதிகாலையில் லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். 15 பயணிகள் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆம்னி பஸ்-லாரி

சென்னையில் இருந்து கம்பம் நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு ஆம்னி பஸ் 34 பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை தேனி மாவட்டம் உத்தமபாளையம் தம்மநாயக்கன்பட்டி கீழத்தெருவை சேர்ந்த சந்திரவாணன் (வயது 37) ஓட்டினார்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சஞ்சீவிநகர் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் பஸ் வந்து கொண்டிருந்தது. அதே நேரம் தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செங்கல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி பஸ்சின் முன்னால் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.

2 பேர் பலி; 15 பேர் காயம்

இந்த நிலையில் திடீரென ஆம்னி பஸ் லாரியின் பின்னால் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் பஸ்டிரைவர் சந்திரவாணன், பஸ்சில் பயணம் செய்த திண்டுக்கல் ஈ.வி.ஆர். ரோட்டை சேர்ந்த ராஜகோபாலின் மனைவி பழனியம்மாள் (75) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பஸ்சில் பயணம் செய்த பழனியம்மாளின் பேத்திகள் சரண்யாதேவி (29), மாளினி (18), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த செல்வராஜ் (37), பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (29), தேனி மாவட்டம் வட புதுப்பட்டியை சேர்ந்த குணசேகரன் (40), செல்லாயிபுரத்தை சேர்ந்த செல்வகோபி (27), தேவதானத்தை சேர்ந்த அய்யனார் (26), காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆனந்த் (22), சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த வேதாசுப்பிரமணியன் (44), சூளைமேட்டை சேர்ந்த சிவா (25), எழில்நகரை சேர்ந்த ஐஸ்வர்யா (29), நேதாஜி தெருவை சேர்ந்த குமார் (44), குளத்தூரை சேர்ந்த முரளி (45), பொன்னேரியை சேர்ந்த பிரவீன்ராஜ் (37), தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த பிரகாஷ் (26) ஆகிய 15 பேர் காயம் அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு மற்றும் கோட்டை போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் சிலர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். சிலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் விபத்தில் பலியான டிரைவர் சந்திரவாணன், மூதாட்டி பழனியம்மாள் ஆகியோரது உடல்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் பஸ் மீட்கப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments