ஆன்லைன் வர்த்தகம் மூலம் சம்பாதிக்கலாம் எனக்கூறி ரூ.45 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை




ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி ராமநாதபுரத்தை சேர்ந்தவரிடம் ரூ.45 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் வர்த்தகம்

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 50). கடை வைத்து சுய தொழில் செய்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு வாட்சப்பில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து ஜெயபால் விசாரித்தபோது பிரபல வர்த்தக நிறுவனத்தின் வாட்ஸ்அப் குழுவின் இணைப்பு ஒன்றை மர்ம நபர்கள் அனுப்பியுள்ளனர். அந்த இணைப்பில் சென்று ஜெயபால் சுய விவரங்களை பதிவு செய்து அவர்கள் அளித்த வேலைகளை செய்துள்ளார். இவ்வாறு செய்தபோது அவருக்கு முதல் கட்டமாக ரூ.20 ஆயிரம் கிடைத்தது.

தொடர்ந்து இவ்வாறு ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியதால் அதனை நம்பி ஜெயபால் அடுத்தடுத்து அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தி ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டார். மேலும் எவ்வளவு அதிக பணம் முதலீடு செய்கிறீர்களோ அதே அளவு ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று மர்ப நபர்கள் ஆசை வார்த்தை கூறியதால் ஜெயபால் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கினார்.

சைபர் கிரைம் போலீசார் விசாரணை

அவர்களின் பேச்சை நம்பி ஜெயபால் ரூ.45 லட்சம் வரை செலுத்திய நிலையில் திடீரென மேற்கண்ட பிரபல ஆன்லைன் வர்த்தக டிரேடிங் செயலி செயல்பாடு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயபால் இது குறித்து விசாரித்த போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர் அவர் இதுகுறித்து சைபர்கிரைம் இணையதளத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பேரில் சைபர்கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மேற்கண்ட பிரபல ஆன்லைன் வர்த்தக டிரேடிங் நிறுவனத்தின் பெயரில் பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெயபால் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் அவர் பணம் செலுத்திய வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அதில் உள்ள பணத்தை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments