ஓட்டு கேட்டு ஊருக்குள் வரக்கூடாது என கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் எதிர்ப்பு கறம்பக்குடி அருகே பரபரப்பு




கறம்பக்குடி அருகே ஓட்டுக் கேட்டு ஊருக்குள் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்புக்கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பல்லவராயன்பத்தை ஊராட்சியை சேர்ந்த ஆத்தியடிப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு முறையான சாலை, குடிநீர், மயானம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.இதுகுறித்து இப்பகுதி மக்கள் சார்பில் பலமுறை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. பல போராட்டங்கள் நடத்தியும் பேச்சுவார்த்தையில் உறுதியளித்தபடி அதிகாரிகள் பொதுமக்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்ற வில்லை.

ஊருக்குள் வர எதிர்ப்பு

இதனால் ஆத்திரமடைந்த ஆத்தியடிப்பட்டி கிராமமக்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதையொட்டி ஊரின் முகப்பில் ஓட்டு கேட்டு ஊருக்குள் யாரும் வரக்கூடாது என பதாகை வைத்திருந்த நிலையில் நேற்று ஓட்டு கேட்டு வர எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் மற்றும் சாலைகளில் கருப்புக் கொடி ஏற்றி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருப்பு கொடியேற்றி...

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் கிராமம் குறிப்பாக பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. ஓட்டுப் போட மட்டுமே நாங்கள் என்ற நிலைக்கு அரசியல் வாதிகள் எங்களை வைத்துள்ளனர். அதனால்தான் அடிப்படை வசதிகள் அற்ற எங்கள் கிராமத்திற்குள் ஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது என தீர்மானித்துள்ளோம். இருண்ட எங்கள் கிராமத்தின் நிலையை கருப்பு கொடி ஏற்றி வெளிப்படுத்தி உள்ளோம். எங்களுக்கான முறையான வசதிகளை செய்து தந்து விட்டு அதிகாரிகள் எங்களிடம் வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் எனக் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments