தேர்தல் விதிமீறல் தொடர்பாக சி-விஜில் செயலியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் வரும் தகவல்களுக்கும் நடவடிக்கை




தேர்தல் விதிமீறல் தொடர்பாக சி-விஜில் செயலியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் வரும் தகவல்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தேர்தல் விதிமீறல்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதி மீறல்கள் குறித்து புகார்களை செல்போன் வாயிலாக மாவட்ட தேர்தல் பிரிவிற்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம். இதற்காக சிறப்பான வசதியினை இந்திய தேர்தல் ஆணையம் சி-விஜில் என்ற செயலியில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வசதியுள்ள செல்போன்களில் `cvigil' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அவ்வாறு பதிவிறக்கம் செய்து, செயலாக்கம் செய்யும் போது பொதுமக்கள் தங்களின் செல்போன் எண்ணை உள்ளீடு செய்து வரப்பெறும் ஒருமுறை கடவுச்சொல்லை உள்ளீடு செய்து தங்கள் பெயர், முகவரி, சார்ந்து இருக்கும் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். தேர்தல் சம்பந்தமான அலுவலர்கள் தங்களை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை கோரினால் விவரங்களை அளிப்பதற்கு தயார் என்ற நிபந்தனையை டிக் (•) செய்யவும்.

கட்டுப்பாட்டு அறை எண்கள்

பரிசு, பணம், கூப்பன்கள், மதுபானம் இதர பொருட்கள் வினியோகம், அனுமதியின்றி சுவரொட்டிகள், பதாகைகள், தடை காலத்தில் பிரசாரம் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் ஒலிபெருக்கிகள் மற்றும் இதர பிற தேர்தல் நடத்தை விதிகள் மீறல் குறித்த தகவல்களை புகைப்படம், ஆடியோ, வீடியோ வடிவில் புகார்களை இந்த செயலியில் பதிவு செய்யலாம்.

தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1950, 18004252735 மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 04322- 2229860, 229870, 229880, 229890 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும்.

ஒத்துழைப்பு

எனவே பொதுமக்கள் சி-விஜில் செயலியை பயன்படுத்தி தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து தேர்தல் அமைதியாக நடத்த ஒத்துழைப்பு வழங்க மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments