புதுக்கோட்டையில் தபால் வாக்கினை தேர்தல் அலுவலர்கள் ஆர்வமுடன் பதிவு கலெக்டர் நேரில் ஆய்வு




புதுக்கோட்டையில் தபால் வாக்கினை தேர்தல் அலுவலர்கள் ஆர்வமுடன் பதிவு செய்தனர். வாக்குப்பதிவை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டார்.

நாடாளுமன்ற தேர்தல்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு ஆங்காங்கே தொடங்கி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தபால் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்டமாக பயிற்சி வகுப்பு நடந்த இடங்களில தபால் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தபால் வாக்குப்பதிவு

திருச்சி, சிவகங்கை, கரூர், ராமநாதபுரம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பெட்டிகள் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன. மேலும் மற்ற நாடாளுமன்ற தொகுதிகளுக்கு என தனியாக ஒரு பெட்டியும் வைத்திருந்தனர். வாக்குச்சாவடிகளில் பணிபுரியக்கூடிய அலுவலர்கள் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்தனர். அவர்களது படிவத்தை சரி செய்து நிரப்பி கொடுக்க வசதியாக ஊழியர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் தபால் வாக்குப்பதிவில் வேட்பாளரின் பெயர், சின்னம் அடங்கிய பட்டியலில் டிக் செய்தவற்கு வசதியாக மேஜையும், ரகசியம் காப்பதற்காக அந்த மேஜையை சுற்றி தேர்தல் தொடர்பான அட்டையும் வைக்கப்பட்டிருந்தன. படிவத்தில் டிக் செய்தபின் அதனை கவரிட்டு, அந்த தபாலை தபால் பெட்டியில் செலுத்தினர். வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், அலுவலர்கள் ஆர்வமுடன் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்தார்கள்.

கலெக்டர் ஆய்வு

முன்னதாக தபால் வாக்குப்பதிவு தொடங்கும் போது தபால் வாக்குகளை செலுத்தக்கூடிய பெட்டியை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறந்து காண்பிக்கப்பட்டது. மேலும் அதனை பூட்டி `சீல்' வைத்தனர். தபால் வாக்குப்பதிவு நடைபெற்றதை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டார்.

அப்போது திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. ஐஸ்வர்யா, தாசில்தார் பரணி, கிராம நிா்வாக அலுவலர் வசந்த் உள்பட அலுவலர்கள் உடன் இருந்தனர். வாக்குப்பதிவு மாலையில் முடிவடைந்தது. தொடர்ந்து அடுத்து வருகிற 16, 18-ந் தேதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments