ஏப்ரல் 19-ந் தேதி ஓட்டுப்பதிவு முடிந்தாலும் ஜூன் 4 வரை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல தடை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்





தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடக்கிறது. அன்று ஓட்டுப்பதிவு முடிந்தாலும் ஜூன் 4-ந் தேதி வரை உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்வதற்கான தடை நீடிக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் 19-ந்தேதி நடைபெறுவதால், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மற்றும் அதிகாரிகள் முழுவீச்சில் செய்து வருகிறார்கள்.

பறக்கும் படை சோதனையில் சிக்கிய பணம், நகை, பொருட்கள் பற்றிய விவரங்களை சத்யபிரத சாகு தினமும் தெரிவித்து வருகிறார்.

ரெயிலில் ரூ.4 கோடி

அந்த வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் பணியில் உள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 2 கட்ட பயிற்சிகள் நிறைவடைந்து உள்ளன. இறுதிக்கட்ட பயிற்சி 18-ந் தேதி நடைபெறும்.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி ரொக்கப்பணம் தொடர்பாக வருமான வரித்துறை சிறப்புக் குழு விசாரணை நடத்தும். தேர்தல் சிறப்பு செலவினப் பார்வையாளரும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவார்.

இவர்களின் தனித்தனி அறிக்கைகள், இந்திய தேர்தல் கமிஷனுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். எங்களுக்கு அதுபற்றிய தகவல் மட்டும் தெரிவிக்கப்படும். செலவின பார்வையாளர் அளிக்கும் பரிந்துரை அடிப்படையில்தான் தேர்தல் கமிஷன் உரிய முடிவை அறிவிக்கும். பணப்பறிமுதல் தொடர்பாக நெல்லை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்பதற்கும் தேர்தல் கமிஷன்தான் பதில் அளிக்கும்.

வருமானவரித்துறை சிறப்புக்குழு

பொதுவாகவே தேர்தல் நேரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்படும் நிகழ்வுகளில் வருமான வரித்துறையின் சிறப்புக்குழு விசாரணை நடத்துவதும், தேர்தல் கமிஷன் நேரடியாக தலையிடுவதும் வழக்கமான ஒன்றுதான். இந்த தேர்தலில் தமிழகத்தில் சில தனி நபர்கள் மற்றும் நகைக்கடை நிறுவனங்கள் உள்ளிட்ட 13 நிகழ்வுகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 கோடிக்கு மேல் கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதுதொடர்பாக வருமான வரித்துறையின் சிறப்பு குழு, விசாரணை நடத்தி வருகிறது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிடிபட்ட பணம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கை மட்டுமே எங்களுக்கு கிடைத்துள்ளது.

ஜூன் 4-ந் தேதி வரை...

தமிழகத்தில் வரும் 19-ந் தேதி ஓட்டுப்பதிவு முடிந்தாலும், ஓட்டு எண்ணும் நாளான ஜூன் 4-ந் தேதி வரை பணம் தொடர்பான தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். ஏனென்றால், அடுத்தகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பக்கத்து மாநிலங்களில் உள்ள சிலர், பணப்பரிமாற்ற நடவடிக்கைகளுக்காக தமிழகத்தை பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே தமிழகத்திலும் ஜூன் 4-ந் தேதி வரை ஒருவர், உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்ல முடியாது. இங்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும், பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு பறக்கும்படை மட்டும் இருக்கும்.

ரூ.208 கோடி பணம், பொருட்கள்

தமிழகத்தில் 7-ந் தேதி வரை ரூ.88.12 கோடி ரொக்கம் உள்பட ரூ.208.41 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதில் வருமான வரித்துறையினர் ரூ.28.12 கோடி பறிமுதல் செய்து உள்ளனர். ரூ.99.38 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள். ரூ.15.49 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள், ரூ.4.53 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ.87 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அகர வரிசைப்படியான வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி அலுவலரிடம் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

2 கோடி பேருக்கு ‘பூத் சிலிப்’

பெரம்பலூர் பகுதியில் ஒடிசாவை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் விபத்தில் மரணம் அடைந்தார். அவரது உடல் ஒடிசா கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் பகுதியில் தேர்தல் பணி முடித்து சென்ற தேர்தல் அலுவலர் இறந்துவிட்டார். இருவருக்கும் இழப்பீடு தொகை வழங்க தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 2.08 கோடி (33.46 சதவீதம்) பேருக்கு ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டு உள்ளது. வருகிற 13-ந் தேதிக்குள் 100 சதவீத ‘பூத் சிலிப்’களும் வினியோகம் செய்யப்பட்டுவிடும்.

சென்னை, மும்பை உள்ளிட்ட வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக உள்ள நகரங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், அங்குள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் அறிவுரை வழங்கியுள்ளார்.

100 சதவீதம் வாக்குப்பதிவு என்பது தேர்தல் கமிஷன் இலக்கு. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதள பாதை அமைக்கும் பணி, வாக்குப்பதிவுக்கு 3 நாட்களுக்கு முன்பு நிறைவடையும்.

இவ்வாறு சத்யபிரத சாகு கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments