தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள்’ எச்சரிக்கை




தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்

வழக்கமாக ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில்தான் வெயிலின் உக்கிரத்தை பார்க்க முடியும். ஆனால் இந்த ஆண்டு அதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கிறது. குறிப்பாக ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், திருத்தணி, வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.

வெப்ப அலை வீசக்கூடும்

அந்த வகையில் ஈரோட்டில் நேற்று முன்தினம் மட்டும் இயல்பைவிட 5.5 டிகிரி அதிகமாக வெப்பம் பதிவாகி இருந்தது. அதாவது, 109 டிகிரி வெயில் பதிவானது. இது இந்த ஆண்டில் 2-வது முறையாக அதிகபட்ச வெயில் பதிவானதாக பார்க்கப்படுகிறது. இதுதவிர மற்ற இடங்களில் 105 டிகிரிக்கு மேலும் வெப்பத்தின் அளவு பதிவானது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிலும் உள் மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி வரை அந்த பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக பதிவாகும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்போது, அசவுகரியமான நிலை ஏற்படும். இதனால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வறண்ட வானிலை

இதற்கிடையே தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களையொட்டிய மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற இடங்களில் எல்லாம் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதை உணர்த்தும் வகையில் நேற்று சில இடங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ வானிலை ஆய்வு மையம் சார்பில் நிர்வாக ரீதியிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எதற்காக ‘மஞ்சள் எச்சரிக்கை’?

பொதுவாக மழை காலங்களில், கனமழை பெய்யக்கூடிய இடங்களுக்கு நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை (அலர்ட்) விடுக்கப்படுவது வழக்கம். அதேபோல், வெயில் காலங்களிலும் ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்படும். அந்தவகையில் வெயில் காலங்களில் வெப்ப அலையினால் ஏற்படும் வெப்ப அளவுகளை பொறுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், 5 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகக் கூடிய இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்படும்.

அதன்படி, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments