திருவாரூர் - காரைக்குடி ரயில் இன்று மே 05 முதல் இனி தினசரி ரயிலாக இயங்கும் திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதையில் அகல ரயில் பாதை மாற்றத்திற்கு பிறகு இயங்கும் முதல் தினசரி ரயில்




திருவாரூர்-காரைக்குடி பயணிகள் சிறப்பு ரெயில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

திருவாரூர்-காரைக்குடி சிறப்பு ரெயில்

திருவாரூர்-காரைக்குடி பயணிகள் சிறப்பு ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயங்கி வந்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் செல்ல இயலாமல் பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். ரெயில் பயணிகள், வர்த்தகர்கள், அரசு அலுவலர்கள், இந்த ரெயிலை ஞாயிற்றுக்கிழமையும் இயக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும்

இந்த கோரிக்கையை ஏற்று தெற்கு ரெயில்வே நிர்வாகம், இந்த ரெயில் இன்று(5-ந் தேதி) முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும் என உத்தர விட்டுள்ளது. திருவாரூரில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு வரும் இந்த ரெயில் பட்டுக்கோட்டைக்கு 7.56 மணிக்கு வந்தடைகிறது. தொடர்ந்து இங்கிருந்து புறப்பட்டு காரைக்குடியை காலை 9.35 மணிக்கு சென்றடைகிறது.

சென்னை செல்ல...

மீண்டும் இந்த ரெயில் மாலை 6 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு இரவு 7.13 மணிக்கு வந்தடைந்து தொடர்ந்து திருவாரூருக்கு இரவு 9.25 மணிக்கு சென்றடைகிறது. அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்ல விரும்பும் ரெயில் பயணிகள் இந்த ரெயிலில் திருவாரூருக்கு சென்றால் திருவாரூரில், காரைக்கால் -சென்னை எழும்பூர் கம்பன் எக்ஸ்பிரஸ்(வண்டி எண் 16176) மற்றும் மன்னை எக்ஸ்பிரஸ்(வண்டி எண் 16180) விரைவு ரெயில்களில் திருவாரூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்லலாம்.


பயனுள்ளதாக...

அதேபோல் சென்னையில் இருந்து இந்த பகுதிகளுக்கு வருபவர்கள் திருவாரூரில் இருந்து இந்த ரெயில் மூலமாக தங்கள் ஊர்களுக்கு வரலாம். திருவாரூர் பகுதியில் இருந்து அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், குன்றக்குடி முருகன் கோவில், அழகப்பா பல்கலைக்கழகம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடியில் உள்ள கல்வி நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள் செல்ல இந்த ரெயில் பயனுள்ளதாகும். மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து திருவாரூர் வழியாக கம்பன் விரைவு ரெயில், மன்னை விரைவு ரெயிலில் சென்னை எழும்பூர் செல்வோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ரெயில்வே நிர்வாகத்துக்கு நன்றி

ஞாயிற்றுக்கிழமையும் இந்த ரெயில் இயங்க உத்தரவு இட்ட தெற்கு ரெயில்வே அதிகாரிகளுக்கு ரெயில் பயணிகள், வர்த்தகர்கள், அரசு அலுவலர்கள், நன்றி தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் இதேபோன்ற ஒரு ரெயிலை எதிர் திசையில் காரைக்குடியில் இருந்து இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments